நடிகர் ரிஷப் ஷெட்டி ஆடம்பரமிக்க பெங்களூரு நகர வாழ்க்கையை விட்டுவிட்டு கிராம வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.
பிரபலங்கள் பலரும் நகரத்தின் வேகமான மற்றும் வசதியான வாழ்க்கையையே விரும்புகிறார்கள்.
குறிப்பாக அதிலும் சிலர் பெங்களூரு போன்ற வர்த்தக நகரத்தில் குடியேறவே விரும்புகிறார்கள். ஆனால் இவர்களிடம் இருந்து மறுபட்ட ரிஷப் ஷெட்டி வேறு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
காந்தாரா பாகம் 1 படத்தின் மூலம் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இந்த படத்திற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செட் அமைக்கப்பட்ட கடலோர கிராமத்திலேயே அவர் வசித்து வந்துள்ளார்.
படப்பிடிப்பு நீண்ட காலம் மற்றும் சவாலானதாக இருந்ததால், குடும்பத்தை விட்டுப் பிரிய அவருக்கு மனமில்லை. அதனால், படத்தின் செட் அமைக்கப்பட்ட கடலோர கிராமத்திற்கு தனது குடும்பத்தினரை அழைத்து வந்துள்ளார்.
தனது குழந்தைகளையும் அருகிலுள்ள பள்ளிகளிலேயே படிக்க வைத்துள்ளார். தற்போது படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் பெங்களூரு நகரத்திற்கு குடிபெயராமல், தனது சொந்த ஊரான குந்தாபுராவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
தனது குழந்தைகளும் குந்தபுராவில் உள்ள பள்ளியில் கல்வி பயிலுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் குழந்தைகள் அங்குப் படிப்பைத் தொடர்வதா அல்லது பெங்களூருவுக்கு திரும்புவதா என்பதை அடுத்த மார்ச் மாதத்திற்குள் முடிவு செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இவையெல்லாம் ஒரு புறமிருந்தாலும் பரபரப்பான நகர வாழ்க்கையை விட்டுவிட்டு அமைதியான கிராம வாழ்க்கையை ரிஷப் ஷெட்டி அனுபவித்து வருவதே தற்போது பேசு பொருளாகியுள்ளது.