நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் படிக்கட்டு கதவுடன் கழன்று விழுந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் பணிக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் பயணம் செய்தனர்.
பேருந்து கூட்டமாக இருந்ததால் படிகளில் நின்றவாறு மாணவர்கள் பயணித்தனர். ஆவத்திப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து வேகத்தடையின் மீது ஏறி இறங்கியது.
அப்போது பேருந்தின் பின்புற படிக்கட்டு உடைந்து கதவுடன் கழன்று விழுந்தது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தொடர்ந்து பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டு உடைந்த படிகட்டையும், கதவையும் கயிற்றால் கட்டி பேருந்தை ஓட்டுநர் பணிமனைக்கு கொண்டு சென்றார்.
இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளான பயணிகள் பாழடைந்த பேருந்துகளை மாற்ற வேண்டும் என்றும், பேருந்துகளை முறையாகப் பராமரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.