விசிகவினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகப் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனப் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றம் அருகே விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கலந்த கொண்ட பிறகு விசிக தலைவர் திருமாவளவன் காரில் புறப்பட்டுச் சென்றார். உயர்நீதிமன்றம் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தின் மீது திருமாவளவனின் கார் மோதியது.
இதனையடுத்து கோபமடைந்த இருசக்கர வாகனத்தை இயக்கிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, காரை ஏன் வேகமாக ஓட்டி வந்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த விசிகவினர் இளைஞரை விரட்டி விரட்டித் தாக்கினர். இதில், காயமடைந்த வழக்கறிஞர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞரின் சகோதரி, தனது சகோதரரை விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து சரமாரியாகத் தாக்கியதாக குற்றம்சாட்டினார்.
இது தொடர்பான புகாரை போலீசார் ஏற்க மறுத்ததாகவும், வெளியே சென்றால் விசிகவினர் தாக்குவார்கள் என அச்சுறுத்தியதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும், ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்திருப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் கண்ணீர் மல்க கூறினார்.