சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயமான விவகாரத்தில் தேவசம் போர்டுக்கு தங்கமுலாம் பூசும் செலவை ஏற்றத் தொழிலதிபர் எழுதிய கடிதம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள், 2019ஆம் ஆண்டு செப்பனிடப்பட்டு, அதே ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி மீண்டும் அணிவிக்கப்பட்டன.
இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டபோது தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியிடம் வழங்கபட்ட 42.8 கிலோவாக இருந்த கவசங்கள், செப்பனிட்ட பிறகு 38 கிலோவாகக் குறைந்திருந்தது.
இந்த விவகாரம் கேரளாவில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மாயமான 4.54 கிலோ தங்கம் குறித்த வழக்கில் உண்மையைக் கண்டறிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ளக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், செப்பனிடப்பட்ட கவசங்களை துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவித்த பின் தேவசம் போர்டுக்கு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் இ-மெயில் வாயிலாக எழுதிய கடிதம் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், சபரிமலையின் துவாரபாலகர்கள் சிலைகளுக்குத் தங்க முலாம் பூசும் பணிகள் முடிந்ததாகவும், தம்மிடம் தங்கம் மிச்சம் இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி தேவைப்படும் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு, தேவசம் போர்டு ஒத்துழைப்புடன் அந்தத் தங்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா எனவும் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது. இதனைப் படித்துப் பார்த்துக் கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
துவாரபாலகர்கள் சிலையில் இருந்த தங்கம் மாயமானது குறித்தும், அதில் நடந்த முறைகேடுகள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்துமாறு சிறப்பு புலனாய்வு குழுவுக்குக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.