மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள அதிநவீன சர்வதேச விமான முனையத்தின் கட்டடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மும்பையில் விமான பயண நெரிசலை தவிர்க்க 2வது சர்வதேச விமான நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டு, நவிமும்பையில் அதற்கான பணி தொடங்கியது.
நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமாக உருவெடுக்கும் இந்தச் சர்வதேச விமான நிலையத்தில் 4 கட்டங்களாகப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 19 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதற்கட்ட பணி நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் மும்பைக்கு வருகைதந்த பிரதமர் மோடி, தயாராக உள்ள விமான நிலையத்தின் கட்டடம் ஒன்றை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்வில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தொழிலதிபர் கெளதம அதானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் மகாராஷ்டிர அரசு சார்பில் பிரதமர் மோடியை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக நவி மும்பைக்கு வருகைதந்த பிரதமர் மோடிக்கு, அம்மாநில அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நடனக் கலைஞர்கள் பலரும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்திப் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
பின்னர் நவிமும்பை சர்வதேச விமான நிலையத்தின் மாதிரியைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். அதன் பிறகு மாற்றுத் திறனாளிகளுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த புதிய விமான நிலையத்தின் மூலம் மும்பைக்கு வர்த்தகம் மற்றும் இணைப்பு மேலும் அதிகரிக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் இந்த விமான நிலையத்தின் அதிநவீன வசதிகள் குறித்த வீடியோவையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
அதன்பிறகு மும்பை மெட்ரோ பாதை மூன்றின் இறுதி கட்டத்தைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பிரதமர் மோடி, 11 பொது போக்குவரத்து நிறுவனங்களுக்கான இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பொது இயக்கச் செயலியான மும்பை ஒன் செயலியைத் தொடங்கி வைத்தார்.
பிறகு பேசிய அவர், நவி மும்பை சர்வதேச விமான நிலையம் விக்சித் பாரதத்தை பிரதிபலிக்கும் ஒரு திட்டம் எனக் குறிப்பிட்டார். மேலும், இந்தப் புதிய விமான நிலையத்தின் மூலம், மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் சந்தைகளுடன் இணைக்கப்படுவார்கள் என்றும், இது முதலீடுகளையும் புதிய வணிகங்களையும் ஈர்க்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மும்பை பொருளாதார தலைநகரம் மட்டுமல்ல, இந்தியாவின் மிகவும் துடிப்பான நகரங்களில் ஒன்று எனக் கூறினார்.
2008ல் பயங்கரவாதிகள் மும்பையை தாக்கியதற்கு இதுவே காரணம் எனக்கூறிய அவர், அப்போதைய காங்கிரஸ் அரசு பலவீனமாக இருந்ததையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
ஏனென்றால், மும்பை தாக்குதலுக்குப் பிறகு நமது பாதுகாப்பு படைகள் பாகிஸ்தானை தாக்குவதற்கு தயாராக இருந்ததாகவும், வேறொரு நாட்டின் அழுத்தம் காரணமாக அப்போதைய காங்கிரஸ் அரசு நமது பாதுகாப்புப் படைகளைத் தடுத்ததாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
மேலும், காங்கிரஸ் அரசின் பலவீனம் பயங்கரவாதிகளைப் பலப்படுத்தியதாகவும், பாதுகாப்புப் படைகளைத் தடுத்து நிறுத்தியது யார் என்பதை காங்கிரஸ் மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்திப் பேசினார்.