இன்னும் 10 ஆண்டுகளில், நாடு முழுமைக்குமான வான் பாதுகாப்பு அமைப்பான சுதர்சன் சக்ராவை உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது இந்தியா. அதன் ஒரு பகுதியாக இந்திய முப்படைகளும் இணைந்து ஒருங்கிணைந்த ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிர்ப்புப் பயிற்சியை Cold Start கோல்ட் ஸ்டார்ட் என்ற பெயரில் மேற்கொண்டுள்ளன. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவரான மறைந்த ஜெனரல் பிபின் ராவத், இந்தியா தனது அடுத்த போரை தன் சொந்த ஆயுதங்களால் நடத்தும் என்று கூறியிருந்தார். இந்திய பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சௌகான், மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையில் போர் நடக்கக்கூடிய காலகட்டம் இது. நாளை இயந்திரங்களுக்கு இடையே போர் நடக்கக்கூடும் என்று கூறியிருந்தார்.
2020ம் ஆண்டு முதல், இந்தியா தனது எதிர்-ட்ரோன் உள்கட்டமைப்பை உலகமே வியக்கும் அளவில் மேம்படுத்தி வருகிறது. உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்பு, எதிரிகள் ஏவும் ட்ரோன் கூட்டங்களை நொடியில் இடைமறித்து அழிக்கும் பார்கவாஸ்த்ரா, ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு மற்றும் உளவுத்துறையுடன் இணைந்து AI-யால் இயங்கும் இந்திரஜால் என அதிநவீன ட்ரோன் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புக்களை DRDO உருவாக்கியுள்ளது.
குறிப்பாக, கடந்த ஏப்ரல் 13ம் தேதி, ட்ரோன் எதிர்ப்பு லேசர் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக பரிசோதித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது DRDO. இதன் மூலம் ட்ரோன் எதிர்ப்பு லேசர் ஆயுதத்தை (anti drone laser weapon) உருவாக்கிய 4-வது நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா. இந்த ஆண்டு தொடக்கத்தில், 2027ம் ஆண்டுக்குள் அனைத்து இந்திய ராணுவ வீரர்களுக்கும் ட்ரோன்களில் போதுமான பயிற்சி அளிக்கப்படும் என்று ராணுவ பயிற்சி கட்டளை தெரிவித்திருந்தது.
பாதுகாப்புப் படைகளில் ட்ரோன்களை ஒரு நிலையான ஆயுத அமைப்பாகச் சேர்ப்பதற்கு இணங்க, அனைத்துப் படையினருக்கும் நிலையான பயிற்சி பாடத்திட்டத்தில் ட்ரோன் பயிற்சி கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு சிப்பாயின் பயிற்சியிலும் ட்ரோன் மற்றும் ட்ரோன் எதிர்ப்புச் செயல்பாட்டை முப்படைகளிலும் முக்கிய திறனாக மாற்றுவதற்காக, நாடு முழுவதும் உள்ள 19 முக்கிய ராணுவப் பயிற்சி நிறுவனங்களில் ட்ரோன் பயிற்சி மையங்கள் அமைப்பதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் இந்த ட்ரோன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியா மீது பாகிஸ்தான் ஏவிய 800க்கும் மேற்பட்ட துருக்கி ட்ரோன்களை இந்தியா வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.
இந்தியாவின் தாக்குதலைத் தாங்க முடியாத பாகிஸ்தான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் ஆப்ரேஷன் சிந்தூரை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. சீனாவுடனான எல்லைப் பிரச்னை, இந்தியா மீதான பாகிஸ்தானின் மறைமுகப் போர் ஆகிய இரண்டு சவால்களை நீண்டகாலமாகவே எதிர்கொள்ளும் இந்தியா, இப்போது கூடுதலாக விண்வெளியில் ட்ரோன் மற்றும் சைபர் போர்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சீனாவின் சவால்களுக்கு மத்தியில் மிகப்பெரிய ட்ரோன் போர் உத்தியுடன் கூடிய கோல்ட் ஸ்டார்ட் பயிற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று கவச தாக்குதலை இந்தியா எவ்வளவு விரைவாக ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்த முடியும் ? எதிரியின் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து எப்படி விரைவாக இடைமறித்து அழிக்க முடியும் ? இதற்கான பயிற்சி தான் கோல்ட் ஸ்டார்ட் கோட்பாடு பயிற்சிகளாகும்.
மத்திய இந்தியாவின் பாபினா மற்றும் மோவ் ஆகிய இடங்களில் நடைபெறும் இந்தப் பயிற்சியின் நோக்கம் நாட்டின் வான் பாதுகாப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதே ஆகும். Headquarters Integrated Defence Staff தலைமையில் நடைபெறும் இந்தப் போர் பயிற்சியில், இந்தியாவின் முப்படைகளும் பங்கேற்றுள்ளன. மேலும், பாதுகாப்புத் துறைக்கான தொழில்துறை நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளன.
ட்ரோன் மற்றும் எதிர்-ட்ரோன் போர் திறன்களை சோதித்தல் மற்றும் மேம்படுத்துதல், ஆளில்லா வான்வழி வாகனங்கள், GPS ஜாமிங், மின்னணு போர் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் ஆகியவற்றை விரைவாகப் பயன்படுத்தும் உத்திகளைப் பரிசோதித்தல், வளர்ந்து வரும் வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தயார்நிலையை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்தப் பயிற்சியில் இடம்பெற்றுள்ளன. இந்திய பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சௌகான் மேற்பார்வையில் நடக்கும் இந்தப் பயிற்சிகள், இந்தியா எதிர்கால போருக்கு முழுவீச்சில் தயாராக உள்ளது என்பதையே காட்டுகிறது.
முன்னதாக, கடந்த பதினைந்து நாட்களில், இந்தியா ‘ட்ரோன் கவாச்’, ‘வாயு சமன்வே’ மற்றும் ‘ட்ரோன் கௌஷல்-II’ எனப் பல ட்ரோன் பயிற்சிகளை நடத்தியுள்ளது. கடந்த மாதம் கிழக்கு அருணாச்சல பிரதேசத்தில் ட்ரோன் கவாச் பயிற்சியை இந்திய இராணுவம் மேற்கொண்டது. இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையினர் பங்கேற்ற இந்த 4 நாட்கள் பயிற்சியில் அதிநவீன ட்ரோன் தொழில்நுட்பங்களைச் சரிபார்த்து, கள நடவடிக்கைகளுக்கான அலகு அளவிலான உத்திகள் பரிசோதிக்கப்பட்டன.
ட்ரோன் அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகள் ஏந்திய ட்ரோன்கள் புதிய சவால்களை ஏற்படுத்தும் இந்திய எல்லைப் பாதுகாப்புக்கு இந்தப் பயிற்சிகள் முக்கியமானவை ஆகும். இரண்டு அணுஆயுத நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதிநவீன ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பது மட்டுமல்லாமல், எதிர்கால விண்வெளி போர்க் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலையிலும் இந்தியா உள்ளது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.