“பேச் ஒர்க்” செய்யும் முதல்வரை மக்கள் அத்தனை எளிதாக மன்னித்துவிடுவார்களா? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் ஸ்டாலின்
அவர்களே? தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் இல்லை, முறையான லேப் வசதிகளும் மருந்துகளும் கிடைப்பதில்லை என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
சிறு மழை பெய்தாலும் மேற்கூரை ஒழுகுகிறது நோயாளிகளை வெள்ளம் சூழ்கிறது, சில மருத்துவமனைகளில் தெரு நாய்கள் சாவகாசமாக சுற்றித் திரிகின்றன, டார்ச் வெளிச்சத்தில் வைத்தியம் பார்க்கப்படுகிறது, மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர், தரமற்ற சிகிச்சைகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன, இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று கேட்டால், நோயாளிகளை இனி “மருத்துவப் பயனாளிகள்” என அழையுங்கள் என்று அரசாணை வெளியிட்டு தனது வழக்கமான மடைமாற்று அரசியலைக் கையிலெடுத்துள்ளது இந்த திமுக
அரசு.
இதெல்லாம் என்ன பிழைப்பு? ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அரசின் அனைத்துத் துறைகளையும் அங்குலம் அங்குலமாக சிதைத்து சீரழித்துவிட்டு, தேர்தல் நெருங்கும் சமயத்தில் கவர்ச்சிகரமாகப் பெயர்களை மாற்றி “பேச் ஒர்க்” செய்யும் உங்களை மக்கள் அத்தனை எளிதாக மன்னித்துவிடுவார்களா? என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.