வேலூர் மாவட்டம் பலாம்பட்டு மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
அணைக்கட்டு அடுத்த பலாம்பட்டு மலை கிராம ஊராட்சியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தானியமரத்தூர் பகுதியில் மலைவாழ் பள்ளிக்கு மாணவர்களின் வசதிக்காக தங்கும் விடுதி உள்ளது.
இந்நிலையில் ஜவ்வாதுமலை தொடரில் கடந்த வாரம் பெய்த கன மழையால் நெக்கினி மலைகிராமத்தில் இருந்து அமிர்தி வழியாக செல்லும் கட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றை கடக்க முடியாமல் நீண்ட நேரம் மாணவர்கள் வனப்பகுதியிலேயே காத்திருந்துள்ளனர்.
தகவலறிந்து வந்த பெற்றோர்கள், மாணவர்களை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். எனவே அவற்றின் வழியாக செல்லும் சாலையில் மேம்பாலம் அமைத்து கொடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக அரசு, 100 சதவீதம் கிராம சாலைகள் அமைத்து விட்டோம் என்ற பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறி வருவதாக விமர்சித்துள்ளார். மலைவாழ் மக்கள், மழைக் காலங்களில் கூட தடங்கலின்றி தங்கள் தினசரி வாழ்க்கையைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை அவர் வலியுறுத்தி உள்ளார்.