நெல்லையில் ஊதிய உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் வழங்க கோரி தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியமாக 520 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, தினக்கூலியை 540 ரூபாய் ஆக உயர்த்தி வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
ஆனால் உயர்த்தப்பட்ட தினக்கூலியை மாநகராட்சி நிர்வாகம் வழங்காமல் காலதாமதம் செய்வதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும், உயர்த்தப்பட்ட தினக்கூலி நிலுவை தொகையை வழங்குவதுடன், வரவிருக்கும் தீபாவளிக்கான போனஸ் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.