தீபாவளி பண்டிகையைக் கொண்டாட மக்கள் தயாராகிவிட்டார்கள்… அதிலும் பட்டாசுகள், கேப் வெடிக்கும் துப்பாக்கிகள் இல்லாமல் தீபாவளியா? இதோ சேலத்தில் விதவிதமாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கிகளை பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். அதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளை குதூகலம் அடைய செய்யும் வகையில் ரியல் துப்பாக்கிகளை மிஞ்சும் வகையில் வந்துள்ள இந்த ரீல் துப்பாக்கிகள்தான் விற்பனையில் சூடுபிடித்துள்ளன. சரஸ்வதி பூஜை, தசரா எனப் பண்டிகைகள் முடிவடைந்த நிலையில் தீபாவளி பண்டிகை களைகட்ட தொடங்கி உள்ளது.
பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வியாபாரிகளும் களமிறங்கி உள்ளனர். அதையொட்டி பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் விற்பனையும் களைகட்டியுள்ளன. அந்த வகையில் சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் குழந்தைகளை குதூகலம் அடையச் செய்யும் துப்பாக்கிகள் குவிக்கப்பட்டுள்ளன.
சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கரூர் எனப் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்வதால் தீபாவளி துப்பாக்கிகள் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
பிளாஸ்டிக், சில்வர், தகரம், இரும்பு துப்பாக்கிகள் எனப் பத்து ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த துப்பாக்கிகளுக்குக் குழந்தைகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் போட்டி போட்டு ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.
தீபாவளிக்கு பட்டாசுகள் சத்தம் கேட்டாலும் குழந்தைகளை பொறுத்தவரை கேப் வெடிக்கும் துப்பாக்கிகளை கையில் பிடித்தாலே தங்களை ஹீரோவாக உணரத் தொடங்கி விடுவார்கள். அந்த வகையில் விதவிதமாகக் காட்சியளிக்கும் இந்தத் துப்பாக்கிகள் குழந்தைகளை காந்தம்போல் கவர்ந்திழுக்கின்றன.
















