மூன்று நேரமும் வெறும் பழங்களை மட்டுமே உணவாக உட்கொண்டு வந்த 27 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரணம் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அதிகளவில் துரித உணவுகளை உண்பதாலும், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதாலும் ஒபிசிட்டி எனப்படும் உடற்பருமனால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலர் மாரடைப்பு, புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றால் உயிரிழக்கவும் நேரிடுகிறது. மறுபுறம், உடல்நலத்தை நன்றாகக் கவனித்துகொள்கிறேன் என்ற பெயரில் ஒரு சிலர், போதுமான உணவை எடுத்துக்கொள்ளாமல் ஆரோக்கியத்தை சீரழித்துக்கொள்ளும் சம்பவங்களும் அங்கொங்கும் இங்கொன்றுமாக நடந்தவண்ணம்தான் உள்ளன.
அண்மையில் கேரளாவை சேர்ந்த 24 வயது பெண் உடல்எடையை குறைக்க வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து வந்ததால், நோய்வாய்பட்டு உயிரிழந்தார். இதே போன்ற சம்பவம் தற்போது இந்தோனேஷியாவிலும் நிகழ்ந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த பெண் தண்ணீரை மட்டுமே குடித்ததால் உயிரிழந்தார் என்றால், இந்தோனேஷியாவில் இருந்த பெண் வெறும் பழங்களை மட்டுமே உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார். போலந்தை சேர்ந்த கரோலினா என்பவர் 19 வயதில் இருந்தே இயற்கையான உணவுகளை உட்கொள்ள தொடங்கியுள்ளார்.
3 நேரமும் பழங்களை மட்டுமே உட்கொள்வதை வழக்கமாகவும் மாற்றிக்கொண்டுள்ளார். தனது இந்த உணவுமுறை குறித்து இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்த அவர், தனது புகைப்படங்களையும் அவ்வபோது பகிர்ந்து வந்தார்.
நாளுக்கு நாள் அவரது உடல் மெலிந்துகொண்டே சென்றபோதும், தனது உணவு முறையை அவர் கைவிடவில்லை. இந்நிலையில்தான் கடந்தாண்டு இறுதியில் இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுக்குச் சென்ற அவர், அங்குள்ள விடுதி ஒன்றில் தனியாக வசிக்கத் தொடங்கியுள்ளார்.
நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமாகி, கன்னம், தோள்பட்டை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எலும்புகள் துருத்திக்கொண்டு வெளியே தெரிய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் கரோலினாவால் விடுதியை விட்டே வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படவே, அங்கிருந்த ஊழியர்கள் பழங்கங்களை வாங்கி வந்து கொடுத்துள்ளனர்.
பாலி தீவுக்கு வரும் வெளிநாட்டவர்களில் கணிசமானோர் இப்படி வித்தியாசமானவர்களாக இருப்பார்கள் என்பதால், விடுதி ஊழியர்களும் அவரை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஒருகட்டத்தில் அவரது உடல்எடை வெறும் 23 கிலோவாகக் குறைந்தது.இந்தச் சூழலில் சில நாட்களாக அவர் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.
இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கரோலினா இறந்து கிடந்தார். அவருக்கு 27 வயதுதான் ஆயிகிருந்தது. அவர் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு வலுவிழப்பு நோயாலும், அல்புமின் குறைபாட்டாலும் அப்போது பாதிக்கப்பட்டிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், உரிய மருத்துவ வழிகாட்டுதல் இல்லாமல் பழங்களை மட்டுமே உண்பது ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளனர். பழங்களில் வைட்டமின்கள், நார்ச்சத்து அதிகம் இருந்தபோதிலும், அவற்றில் புரதம், கொழுப்பு, வைட்டமின் பி12 போன்றவை அதிகளவில் இல்லை என்பதையும் அவர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.
அதிகளவில் துரித உணவுகளை எடுத்துக்கொள்வது ஒரு எல்லை என்றால், போதிய சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது மற்றொரு எல்லை. இந்த இரு எல்லைகளுமே உடல் ஆரோக்கியத்தை சீரழிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.