ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், அந்நிறுவனத்திற்கு சுமார் 86 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கான பராமரிப்பு பொருட்கள் என்றாலே ஜான்சன் அண்ட் ஜான்சன் தான் என கூறும் அளவுக்கு ஒரு காலத்தில் அந்நிறுவனம் உலக புகழ் பெற்றிருந்தது. தொலைக்காட்சிகளிலும் அடிக்கடி அந்நிறுவனம் குறித்த விளம்பரங்களை பார்க்க முடிந்தது. தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறி, ஜான்சன் அண்ட் ஜான்சன் என்ற பெயரை செய்தித்தாள்களில்தான் மட்டும்தான் அதிகம் பார்க்க முடிகிறது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு 1886ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம்தான் ஜான்சன் அண்ட் ஜான்சன். குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் டால்கம் பேபி பவுடர் அந்நிறுவனத்தின் பெயரை உலகறிய செய்தது. டால்க் என்ற கனிமத்தில் இருந்துதான் இந்நிறுவனம் பவுடர்களை தயாரித்து வருகிறது.
அந்தப் பவுடர் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்ற குற்றச்சாட்டு 1970களின் முற்பகுதியில் இருந்தே முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் பவுடர்களில் ஆஸ்பெஸ்டாஸ் என்ற கனிமம் உள்ளதாகவும், இது நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது எனவும் கூறப்படுகிறது.
இதனை அறிந்திருந்தும், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அதன் பயன்பாட்டை நிறுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக 1999ம் ஆண்டு டார்லீன் கோக்கர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள் புற்றுநோயை ஏற்படுத்துவதாகக் கூறி தொடரப்பட்ட முதல் வழக்காக இது கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆயிரக்கணக்கில் வழக்குகள் தொடரப்பட்டன. இன்றைய தேதிக்கு அந்நிறுவனத்திற்கு எதிராக ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தகைய தொடர் எதிர்ப்புகள் காரணமாக 2023ம் ஆண்டு முதல் அந்நிறுவனம் பேபி பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்தது. இருந்தபோதும் வழக்குகளை எதிர்கொள்வதும், கோடி கணக்கில் இழப்பீடுகளை வழங்குவதுமாக அந்நிறுவனத்தின் பயணம் தொடர்ந்தவண்ணமே உள்ளது.
இந்நிலையில்தான், அந்நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ஒன்றில் சுமார் 86 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மைய் மூர் என்ற 88 வயது மூதாட்டி 2021ம் ஆண்டு உயிரிழந்தார். ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பை அவர் பயன்படுத்தி வந்ததாகவும், அதன் காரணமாக மீசோதெலியோமா என்ற புற்றுநோய் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் கூறி வழக்கு தொடரப்பட்டது.
5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மூதாட்டிக்கு புற்றுநோய் ஏற்பட ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள்தான் காரணம் என்பதை உறுதிபடுத்தியுள்ள நீதிபதிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 85 ஆயிரத்து 790 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளனர்.
இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ள ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இருப்பினும், அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பாக அதன் தன்மைகுறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும், குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் பராமரிப்பு பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்துள்ளதா என்பதை பெற்றோர்களும் கவனிக்க வேண்டும் என மருத்துவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.