சிவகங்கை அருகே அரசு சார்பில் பட்டா வழங்கி 27 ஆண்டுகளாகியும் வீட்டுமனை கிடைக்காமல் தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் முழு பின்னணி என்ன?… பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணியாளர்களாக வேலைபார்க்கும் இவர்கள்தான் இப்படி குமுறிக் கொண்டிருக்கின்றனர். காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மை பணியாளர்களும், 20க்கும் மேற்பட்ட தினக்கூலி தூய்மை பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களில் நிரந்தர பணியாளர்களாக இருந்தவர்களில் சிலர் வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற நிலையில் நிரந்தர வசிப்பிடம் இல்லாமல் கண்மாய் கரை ஓரங்கள், புறம்போக்கு பகுதிகளில் சிறு வீடுகள் அமைத்து அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களில் 53 நபர்களுக்குக் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய திமுக ஆட்சியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் தனியார் இடத்தைக் கையகப்படுத்தி இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த இடத்திற்கான தொகை உரிமையாளருக்கு வழங்கப்படாததால் அதில் அவர்களே கல்வி நிறுவனம் அமைத்து நடத்தி வருகின்றனர்.
இதனை அறியாத மக்கள் அங்குச் சென்று கேட்டபோது அவர்களை அதிகாரிகள் விரட்டி அடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தூய்மை பணியாளர்கள் மாவட்ட நிர்வாகத்தை நாடியுள்ளனர். தொடர்ந்து இடத்தின் உரிமையாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தூய்மை பணியாளர்களுக்கு மாற்று இடம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் மாற்று இடம் வழங்குவதற்கான ஒப்புதல் ஆவணங்கள் ஆதி திராவிடர் நலத்துறை தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால் இன்று வரை அதற்கான எந்தப் பதிலும் இல்லாததால் கிடப்பிலே போடப்பட்டுள்ளது.
எதனால் தங்களுக்கு பட்டா வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது என்கிற கோணத்தில் சிலர் சென்னை ஆதி திராவிட நலத்துறை அலுவலகம் சென்று முறையிட்டதுடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சரையும் சந்தித்து மனு அளித்தனர். ஆனால் எந்தப் பதிலும் இல்லாததால் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த வருவாய்த் துறையினர் இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் அந்த இடங்களுக்கான பட்டாவை ஏற்பாடு செய்து தருவதாக எழுத்துபூர்வமாக எழுதிக் கையெழுத்திட்டு வழங்கியுள்ளனர்.
27 ஆண்டு காலமாக அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் இந்த மக்கள் வீட்டுமனை பட்டா கிடைத்து எப்போது விடிவு காலம் பிறக்கும் என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். 27 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் கொடுத்த பட்டாவிற்கு தற்போதைய திமுக ஆட்சி என்ன பதில் சொல்லப் போகிறது என்பதும் அவர்களின் கேள்வியாக இருக்கிறது.