குழந்தைகள் உயிரைப் பறித்த 3 இருமல் சிரப்களில் டைஎதிலீன் கிளைகோல் என்ற விஷத் தன்மையுடைய ரசாயனம் கலந்திருப்பதாக உலகச் சுகாதார மையத்திடம் இந்தியா தெரிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
காஞ்சிபுரத்தில் உள்ள Sresan நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் எனும் இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 22 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக அரசுக்கு, மத்தியபிரதேச மாநில சுகாதாரத்துறை கடிதம் எழுதி இருந்தது. இது தொடர்பாகச் சிறப்பு புலனாய்வுக் குழு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதனையடுத்து, விசாரணை நடத்திய தமிழக அரசு, 26 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை மத்திய அரசுக்குத் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை நடத்திய ஆய்வில், மருந்து உற்பத்தி செயல்பாட்டில் 350க்கும் மேற்பட்ட கடுமையான விதிமீறல்களில் ஈடுபட்டதோடு, சுகாதாரமற்ற முறையில் அந்நிறுவனம் இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் தடை செய்யப்பட்ட டைஎதிலீன் கிளைக்கால் (Diethylene glycol) என்ற ரசாயனத்தைச் சேர்த்திருப்பதையும் இந்த ஆய்வறிக்கை உறுதி செய்துள்ளது. இது மருந்தே அல்ல விஷம் எனவும் தமிழக அரசின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருமல் மருந்து காரணமாகக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்தும், இந்த மருந்துகளின் ஏற்றுமதி விவரங்கள் குறித்தும் உலக சுகாதார மையம் இந்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது.
தமிழ்நாட்டில் ஸ்ரீசன் மற்றும் குஜராத்தில் ரெட்னெக்ஸ் மற்றும் ஷேப் பார்மா ஆகிய நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று இருமல் சிரப்களில் டைஎதிலீன் கிளைகோல் என்ற விஷத் தன்மையுடைய ரசாயனம் இருந்தததாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கோல்ட்ரிஃப் மருந்தில் 48.6 சதவீதமும், ரெஸ்பிஃப்ரெஷ் TR சிரப்பில் 1.34 சதவீதமும் மற்றும் ரீலைஃப் சிரப்பில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவும் டைஎதிலீன் கிளைகோல் சேர்க்கப்பட்டிருந்ததையும் மத்திய மருந்துத் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு உறுதி செய்துள்ளது.
சர்ச்சைக்குரிய சிரப்கள் எதுவும் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படவில்லை என்று தெரிவித்துள்ள இந்திய ஒழுங்குமுறை அமைப்பு, குறிப்பிட்ட கோல்ட்ரிஃப், ரெஸ்பிஃப்ரெஷ் TR, மற்றும் ரீலைஃப் என்ற மூன்று சிரப் களும் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
குற்றத்தில் ஈடுபட்ட 3 நிறுவனங்கள் இனி எந்தவொரு மருந்தையும், மருத்துவப் பொருட்களையும் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யத் தடை விதித்த மத்திய சுகாதார அமைச்சகம் மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்களை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
நாட்டில் ஏற்படும் பொது சுகாதார நெருக்கடியைத் தடுக்க விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு உலக சுகாதார மையத்திடம் தெரிவித்துள்ளது.