7 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டிலேயே அரியவகை காந்தங்களை உற்பத்தி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு என்ன காரணம்? அரியவகை காந்தங்கள் என்றால் என்ன? அவற்றின் பயன்பாடு எத்தகையது? என்பது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஆட்டோமொபைல் துறையில் அரியவகை காந்தங்களின் தேவை தவிர்க்க முடியாததாக உள்ளது. குறிப்பாக, வாகனங்களில் பொருத்தப்படும் பேட்டரி உள்ளிட்ட சாதனங்களில் இந்த வகை காந்தங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய காந்தங்களை பெற பெரும்பாலான நாடுகள் சீனாவையே நம்பியுள்ளன. இதனால், உலகம் முழுவதும் உள்ள காந்தங்களின் தேவையில் 90 சதவீதத்தை சீனாதான் பூர்த்தி செய்து வருகிறது.
இந்தச் சூழலில்தான், கடந்த ஏப்ரல் மாதம் காந்த ஏற்றுமதியை சீனா திடீரென நிறுத்தியது. இதனால், உலகின் அனைத்து நாடுகளும் பெரும்பாதிப்பைச் சந்தித்தனன. முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும்சரிவைச் சந்திக்கும்நிலைக்குத் தள்ளப்பட்டனன. அரிய வகை காந்தங்களை வழங்காவிட்டால், 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு நிலைமை சென்றது. இருப்பினும் காந்தங்களை ஏற்றுமதி செய்ய முடியாது என்ற முடிவில் சீனா உறுதியாக உள்ளது. இதனால், வேறு யாரிடம் காந்தங்களை பெறுவதுஎனத் தெரியாமல் உலக நாடுகள் கையை பிசைந்தபடி உள்ளன. காந்தங்களின் தட்டுப்பாடால் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையும்பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இந்தியாவிற்கு காந்தங்களை வழங்க சீனா தயாராகத்தான் உள்ளது. ஆனால், அவ்வாறு வாங்கும் காந்தத்தை எக்காரணம் கொண்டும் அமெரிக்காவிற்கு மறுவிற்பனை செய்யக் கூடாது எனவும், முழுக்க முழுக்க உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வரும் நிலையில், உள்நாட்டிலேயே காந்தங்களை உற்பத்தி செய்யவும் முடிவெடுத்துள்ளது.
சீனாவிடம் 44 மில்லியன் டன் அரிய வகை தனிமங்களுள்ள நிலையில், இந்தியாவிடம் 7 மில்லியன் டன் அளவுக்கு அரிய வகை தனிமங்கள் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது உலகளவில் 3வது அதிக எண்ணிக்கையாகும். பூமிக்கு அடியில் உள்ள அரியவகை தனிமங்களை வெட்டி எடுத்து, சுத்திகரித்து காந்தங்களை தயாரித்து, வாகனங்களில் பொருத்தும் நிலைக்கு மேம்படுத்துவது மிகவும் சிக்கலான வேலையாகக் கருதப்படுகிறது.
இந்தச் சிக்கலான வேலையை சிறப்பாகச் செய்து முடிக்க மத்திய அரசு 7 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரம் டன் அரியவகை தனிமங்கள் வெட்டி எடுக்கப்படும் எனவும், அடுத்த 7 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான பணி உள்நாட்டை சேர்ந்த 5 நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும், அவை ஆண்டுக்குத் தலா 600 முதல் ஆயிரத்து 200 டன் அரியவகை தனிமங்களை வெட்டி எடுக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பணியை செய்து முடிக்க அதிநவீன இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் தேவைப்படும் என்பதால், சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதுடன், மானியங்களை வழங்கவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
தற்போதைய சூழலில் இந்தியாவின் காந்த தேவை ஆண்டுக்கு 4 ஆயிரத்து 10 டன்னாக உள்ளது. 2030ம் ஆண்டுஇந்தத் தேவையின் அளவு 8 ஆயிரத்து 220 டன்னாக உயரும் எனவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் உள்நாட்டிலேயே அரிய வகை காந்தங்களை தயாரிக்கும் மத்திய அரசின் முடிவு, நீண்ட கால நோக்கில் சிறப்பான பலனை அளிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.