கட்சியிலும் ஆட்சியிலும் ‘காலனி’யை அகற்ற மனமில்லாதவர்களால் எப்படி ஜாதி பெயரை நீக்க முடியும்? என்று மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆட்சிக்காலத்தின் இறுதியில் இருக்கும் திமுக, மக்களின் கடும் கோபத்தில் இருந்து தப்பிக்க மடைமாற்றும் அரசியல் வித்தையில் இறங்கி இருக்கிறது.
மாணவர் விடுதியின் பெயர் சமூகநீதி விடுதிகள், அரசு ஆவணங்களில் இருந்து காலனிபெயர் நீக்கம் என புரட்சி செய்வதாக தம்பட்டம் அடித்துக் கொண்டது. வாய் ஜாலங்களில் வித்தகர்களான திமுகவினர் அறிவித்து வரும் வெற்று விளம்பர அறிவிப்புகள் இவை என்பது எல்லோருக்கும் தெரியும்.
கட்சியிலும் ஆட்சியிலும் காலனிகளை உருவாக்கி வைத்திருக்கிறாரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை நீக்க என்ன நடவடிக்கை எடுக்திருக்கிறார் என அப்போதே நான் கேள்வி எழுப்பினேன். பதில் சொல்ல திமுகவினருக்கு திராணியில்லை.
கடந்த நான்கரை ஆண்டுகளாக பட்டியலின மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரம் ஒன்றல்ல… இரண்டல்ல… ஓராயிரம்…
இந்த திருட்டு, ஏமாற்று, மோசடி திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்கள் படும் துன்பங்கள் ஓராயிரம்.. எதற்கு தான் இதுவரை தீர்வு கிடைத்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர்தேக்க தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்று வரை அதற்கு விடை கிடைக்கவில்லை.
தமிழகத்தின் பலப்பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டை சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.
தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான தீண்டாமைக் கொடுமை நிலவுகிறது.தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மனிதர்கள் வசிக்க தகுதியற்ற நிலையில் பட்டியலின மாணவர் விடுதியின் அவல நிலை இருக்கிறது. இதற்கு சமூகநீதி விடுதி என பெயர் சூட்டி விட்டால் போதுமா? உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு பட்டியலின மக்களுக்கு மாபெரும் சமூக அநீதி இழைக்கப்படுவது இந்த போலி திராவிட மாடல் ஆட்சியில் தான்.
இப்போது தமிழகத்தில் தெருக்கள், சாலைகளுக்கு ஜாதி பெயர் நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக புதிய புரட்டு வேலையை திமுக அரசு தொடங்கி இருக்கிறது. காலம் முழுவதும் ஜாதியத்தை வளர்த்து, மக்களுக்குள் மோதலை ஏற்படுத்தி குளிர் காய்ந்து வரும் திமுகவினருக்கு, ஆட்சி அஸ்தமனமாகப்போகும் நேரத்தில் ஏற்பட்டுள்ள ஜாதி பெயர் ஒழிப்பு ஞானோதயம் தமிழக மக்களை ஆச்சிரியமடைய வைக்கிறது.
திமுக அரசு வெளியிட்டுள்ள தெருக்கள், சாலைகளுக்கு வைக்கப்பட வேண்டிய மாற்றுப் பெயர்கள் பட்டியலை பார்த்தாலே இவர்களின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த பட்டியலில் தமிழகத்தில் தமிழை வளர்த்து பக்தி புரட்சியை ஏற்படுத்தி நாயன்மார்கள், ஆழ்வார்கள் பெயர் இல்லை.
ஆங்கிலேயர்களை எதிர்த்து பாரத நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், , அஞ்சலை அம்மாள், கொடிகாத்த குமரன், வ.உ.சி, சுப்ரமணிய சிவா என யார் பெயரும் இல்லை. தமிழகத்தில் உள்ள தெருக்களுக்கு தேசிய தலைவர்கள் பெயர் எதையும் வைக்கக் கூடாதா?
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்த முதலமைச்சர்கள் ராஜாஜி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என யார் பெயர்களும் உங்களுக்கு பிடிக்காது. இந்த பெயர்கள் எதுவும் வேண்டாம். ஆனால் பெரியார், அண்ணா, கலைஞர் என உங்கள் திமுக கம்பெனி பெயர் மட்டும் வைக்க வேண்டுமா? இதற்கு பெயர் தான் சமூக நீதியா?
ஜாதி பெயர் நீக்கம் என்ற பெயரில் திமுக அரசு அரங்கேற்ற திட்டமிட்டுள்ள நாடகம் வெளிப்பட்டு விட்டது. பார்க்கும் இடமெல்லாம் தனது தந்தை கருணாநிதியின் பெயர் இருக்க வேண்டும் என கனவு காண்கிறார் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்.
மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை, எனவே இந்த ஆட்சி முடிவுதற்குள் தமிழகம் முழுவதும் தனது தந்தை கருணாநிதியின் பெயரை சூட்டி விடலாம் என எண்ணுகிறார். இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்திற்கும் கருணாநிதியின் பெயரை சூட்டி விடுவார்கள் போலும். திமுக அரசின் இந்த கபட நாடகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழக அரசு மாற்று பெயர் சூட்டும் நாடகத்தை வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.
தமிழகத்திற்காக திமுக மட்டுமே உழைத்தது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கும் முதலமைச்சரின் செயல் கண்டிக்கத்தக்கது. அனைத்து தலைவர்களின் பெயரையும் இணைத்து புதிய பட்டியலை தமிழக அரசு வெளியிட வேண்டும் என எல். முருகன் தெரிவித்துள்ளார்.