விருதுநகரில் காங்கிரசில் இருந்து மற்றுமொரு நிர்வாகி விலகி திமுகவில் இணைந்திருப்பது, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் கரூர் காங்கிரஸ் நிர்வாகி கவிதா என்பவர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் கட்சியின் கரூர் மாவட்ட பொருப்பாளரும், எம்பியுமான ஜோதிமணி செந்தில்பாலாஜிக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். இது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியது.
இந்நிலையில், இந்த சூடு தணிவதற்கு முன்பே, விருதுநகரை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த சுரேந்திரன் என்பவர், திமுக எம்.எல்.ஏ சீனிவாசன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரசில் இருந்து சீனிவாசன் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை அழிக்க திமுக திட்டம் தீட்டி வருவதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு என்ன பதிலடி கொடுக்கப்போகிறது? என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.