நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் உணவுக் கூடத்துக்கான சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நெல்லை திடியூர் பகுதியில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே தங்கும் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் 7-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் ரத்த மாதிரிகள், குடிநீர் மாதிரிகளை சோதனை செய்ததில் விலங்குகளின் சிறுநீர் மூலம் பரவக்கூடிய ‘எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சுகாதாரமான முறையில் மாணவர்களுக்கு குடிநீர், உணவுகள் உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்யும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தினர் தேதி குறிப்பிடாமல் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, தனியார் கல்லூரில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கல்லூரி வளாகம், உணவு பாதுகாப்பு கூடங்களில் உடனடியாக தூய்மை பணிகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில், தனியார் பொறியியல் கல்லூரியின் உணவுக் கூடத்துக்கான சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.