தமிழகத்தில் காஞ்சிபுரத்திற்கு இணையாகப் புடவைகளின் சாம்ராஜ்யமாகத் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜக்கம்பட்டி உருவாகிறது. சுமார் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான நெசவாளர்களின் கடின உழைப்பால் உருவாகும் காட்டன் புடவைகள் குறித்தும், அதனை வாங்க குவியும் வாடிக்கையாளர்கள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல்மரியாதை திரைப்படத்தில் வரும் அந்த நிலாவத்தான் கையில பிடிச்சேன் எனும் பாடல் வரிகளிலும், கார்த்திக் நடிப்பில் உருவான மேட்டுக்குடி திரைப்படத்தில் மானாமதுரை குண்டு மல்லி எனும் பாடல் வரிகளிலும் சக்கம்பட்டி சேலை எனும் பெயர் பிரதானமாக இடம்பெற்றிருக்கும். அத்தகைய சிறப்புமிக்க சக்கம்பட்டி சேலைகள் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகருக்குட்பட்ட ஜக்கம்பட்டி பகுதியில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஜக்கம்பட்டி சேலையின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. 60 காட்டன், 80 காட்டன், எம்போஸ்டர் காட்டன், காஞ்சி காட்டன், ஒன் சைடு பேடு, எனப் பல்வேறு வகையிலான காட்டன் சேலை தயாரிப்பு பணியில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வெயில் காலமாக இருந்தாலும் சரி குளிர்காலமாக இருந்தாலும் சரி அனைத்து விதமான காலங்களிலும் உடுத்துவதற்கு சிறந்த சேலையாக இருக்கும் ஜக்கம்பட்டி காட்டன் சேலைகளின் விற்பனை களைகட்டத் தொடங்கியிருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் ஜக்கம்பட்டிக்கு வருகை தந்து தங்களுக்கு பிடித்தமான சேலைகளை வாங்கிச் செல்வதோடு, அண்டை மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளில் இருக்கும் பெண்கள் பலர் ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர் செய்து சேலைகளை வாங்கி செல்கின்றனர்.
நெசவாளர்களின் கடின உழைப்பும், பொதுமக்களின் வரவேற்பும் ஜக்கம்பட்டி காட்டன் சேலைகளின் விற்பனையை உலகம் முழுவதும் விரிவடையச் செய்திருக்கிறது.