ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அமெரிக்கா எவ்வாறு வென்றது என்பது குறித்து ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்பது விலை உயர்ந்ததல்ல எனவும் ஆனால் நேரத்தைச் செலவழித்து நீண்ட காலத்திற்கு உறுதியுடன் செயல்படுபவர்களால் சிறந்த முடிவுகள் எட்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனங்கள், H1-B விசா மற்றும் கிரீன் கார்டு செயல்முறை மூலம் நீண்டகால அர்ப்பணிப்புள்ள நபர்களின் தேவையைத் தீர்த்ததாகவும், திறமைக்கான ஆதாரத்தைக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
உறுதியுடன் இருப்பவர்களை அமெரிக்க நிறுவனங்கள் ஊக்குவிக்க முனைவதால் இந்தியர்கள் பதவி உயர்வு பெற்றதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, இந்தியர்களை ஊக்குவிப்பதில் எந்தச் சதித் திட்டமும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் இதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அவர், இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நீண்டகால கவனம் செலுத்தும் கலாச்சாரத்தை உருவாக்குவது பற்றியது எனக் குறிப்பிட்டுள்ளார்.