கிட்னி முறைகேடு தொடர்பான வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து சட்டவிரோதமாகக் கிட்னியை தானம் பெற்றனர்.
திருச்சி, பெரம்பலுாரில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகள் கிட்னி விவகாரத்தில் உடந்தையாகச் செயல்பட்டன. ஆளுங்கட்சி பிரமுகருக்குச் சொந்தமான மருத்துவமனை என்பதால், தமிழக அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை என்றும், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில், ‘சிறப்பு புலனாய்வுக் குழுவை எதிர்க்கவில்லை என்றும், அதிகாரி நியமனத்தை மட்டுமே எதிர்க்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநில அரசு தரும் அதிகாரிகள் பட்டியலில் தகுதியானவர்களை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கிட்னி முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி வழக்கு விசாரணையை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.