திருப்பூரில் முறையாக ஊதியம் வழங்காத ஒப்பந்த நிறுவனத்தைக் கண்டித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 700 டன் குப்பைகளை அகற்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் மூலம் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் பலருக்கு முறையாக ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிக்குள் உரிய சம்பளத்தை வழங்க வேண்டும், தீபாவளி போனஸும் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், தங்கள் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாவது நாளாகத் தொடரும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அள்ளப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.