கோவை-அவினாசி சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள நிலையில், அப்பாலப் பணிகளுக்காக அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்களை அமைக்காமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பேருந்து நிறுத்தங்களை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் அவினாசி சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. சுமார் பத்து கிலோ மீட்டர் தூர பாலத்தில் 4 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
இப்பாலம் அமைப்பதற்காக ஏற்கனவே குறிப்பிட்ட பகுதிகளில் இருந்த பேருந்து நிறுத்தங்கள் அகற்றப்பட்டன. பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட பின்னரும் அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் மீண்டும் அமைக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மருத்துவமனைகள், கல்லூரிகள் அதிகம் இருக்கக்கூடிய அவினாசி சாலையில் பேருந்து நிறுத்தங்கள் இல்லாத காரணத்தினால், அச்சாலையை பயன்படுத்தக்கூடிய பொதுமக்கள் அமரக் கூட இருக்கையின்றி வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
மேம்பாலத்திற்கு கீழே சாலையைக் கடக்கும் வகையில் ஐந்து இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தை காரணம் காட்டி அப்பணிகளை கைவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாலத்தை கட்டி திறந்துவிட்டோம் எனப் பெருமையுடன் பேசும் நேரத்தில் அது மக்களுக்குப் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.