தமிழக அரசியலை தூய்மை செய்ய வேண்டும் என்பதற்காகத் தூய்மை பணியாளர்களை வைத்து முகூர்த்தக்கால் நட வைத்துள்ளதாகப் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பரப்புரை பயணம் என்ற பெயரில் வரும் 12ஆம் தேதி மதுரையில் பரப்புரையை தொடங்கவுள்ளார்.
பாஜக பரப்புரை தொடக்க விழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரையில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், இராம.ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் முகூர்த்தக்காலை நட்டு வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில அமைப்புச் செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன், மதுரையில் அரசியலுக்கான உணர்வு உள்ளதால், பாஜகவின் பரப்புரை பயணம் மதுரையில் இருந்து தொடங்கப்படுகிறது எனக் கூறினார்.
தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் எனத் திமுகவினர் கூறி வருவதால் தமிழகம் தலை நிமிரத் தமிழனின் பரப்புரை பயணம் எனப் பெயர் வைத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் தலை நிமிரும் எனவும் ராம.சீனிவசான் தெரிவித்தார்.