சேலம் டவுன் பகுதியில் குப்பைகளை சேகரிப்போரை ஆபாச வார்த்தைகளால் திட்டும் போலீஸ் ரோந்து வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் டவுன் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட 120க்கும் மேற்பட்ட தெருக்களில் காலை நேரங்களில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டவுன் காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராகப் பணிபுரியும் சக்திவேல் என்பவர் ஆபாசமாகத் திட்டுவதாகவும், குப்பை சேகரிக்கும் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுப்பதாகவும் தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இது குறித்தான புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், கிச்சிபாளையம் மெயின் ரோட்டில் தூய்மை பணியில் ஈடுபட்டபோது சக்திவேலுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, பெண் பணியாளர்களை சக்திவேல் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளர்கள் டவுன் காவல் நிலையம் மற்றும் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.