ஸ்ரீதர் வேம்புவின் ஸோகோ நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்த இளைஞர் சாப்ட்வேர் பொறியாளராக உயர்ந்திருக்கிறார் என்றால் ஆச்சரியமளிக்கிறதல்லவா? நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கும் அப்துல் அலிமின் வாழ்க்கை வரலாற்றைவிரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்…
அப்துல் அலிம்… வாழ்க்கை என்றாவது மாறிவிடாதா? என்ற கனவு காணும் லட்சக்கணக்கான இளைஞர்களில் ஒருவர். ஏழ்மை வாட்டி வதைக்கும் சூழலில் வளர்ந்த இவரோடு, யார் பழகினாலும், நிச்சயம் கரிசனம் ஏற்பட்டுவிடும். அந்த அளவுக்கு அப்பாவியான முகத்தோற்றம் உடையவராக இருந்தார் அப்துல் அலிம். படித்ததோ பத்தாம் வகுப்பு. இந்தக் காலத்தில் பட்டப்படிப்பை முடிக்காமல் ஜெயித்து காட்டுவது என்ன அவ்வளவு சுலபமா?. அப்துல் அலிமை இந்த எண்ணம் நாள்தோறும் வாட்டி வதைத்தது.
சரி நமக்கு வாய்த்தது இவ்வளவு தான் என மனதை தேற்றிக்கொண்ட அப்துல் அலிம், சென்னைக்கு சென்று ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்ளளாம் என முடிவு செய்தார். 2013-ம் ஆண்டில் வெறும் ஆயிரம் ரூபாயுடன் வீட்டைவிட்டுப் புறப்பட்டட அப்துல் அலிம், 800 ரூபாயை ரயில் டிக்கெட்டுக்கே செலவழிக்க வேண்டியிருந்தது.
மிச்ச இருப்பது 200 ரூபாய். இதை வைத்துக்கொண்டு கிராமங்களில் வாழ்க்கையை ஓட்டுவதே சிரமம். சென்னையில் சொல்லவா வேண்டும். சென்னைக்கு வந்த முதல் இரண்டு மாத காலம் அப்துல் அலிமுக்கு நரக வேதனையாக அமைந்தது. ஒருவேளை சாப்பாடு கிடைத்தாலே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.
கிடைக்கும் இடங்களில் எல்லாம் உணவு சாப்பிட்டுக்கொண்டு, வீதிவீதியாகச் சென்று வேலைதேடினார். அதன் பயனாக ஒருநாள், அவருக்குச் சொர்க்க வாசல் திறந்தது. ஸோகே மென்பொருள் நிறுவனமானது அப்துல் அலிமுக்கு, சிறிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. செக்யூரிட்டி வேலை. 12 மணி நேரம் பணி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டதும் மனம் குளிர்ந்து போனார்.
அதுவரை கண்ணாடி கட்டடங்களை வேடிக்கை மட்டுமே பார்த்து வந்த அப்துல் அலிமுக்கு, அங்கேயே வேலை என்றால் சொல்லவா வேண்டும். வாழ்க்கையில் ஏதோ ஒரு பிடிமானம் கிடைத்திருக்கிறது என சந்தோஷப்பட்டார். ஆனால், அவருக்குள் ஒரு ஏக்கம் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒழுங்காக படித்திருந்தால் நாமும் என்ஜினியர் ஆகி இருக்கலாமே… விதவிதமான ஆடைகள் அணிந்து ஸ்டைலாக வாழ்ந்திருக்கலாமே என அப்துல் அலிமின் மனம் உறுத்திக்கொண்டே இருந்தது.
இப்படி நாள்தோறும் உள்ளுக்குள்ளேயே புழுங்கி கொண்டிருந்தவருக்கு, சிபு அலெக்ஸிஸ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. சீனியர் எம்ப்ளாயி ஆக பணிபுரிந்த சிபு அலெக்ஸிஸிற்கு, அப்துல் அலிமை ஏதோ ஒரு காரணத்தால் பிடித்துப்போக, நல்ல நண்பராக மாறியுள்ளார்.
வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற அப்துல் அலிமின் வேட்கையை புரிந்துகொண்ட சிபு அலெக்ஸிஸ், ஸோகோ நிறுவனத்தின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கியுள்ளார். ஸோகோ நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்றால் டிகிரி மட்டுமே வேண்டியதில்லை… முழுக்க முழுக்க திறமை மட்டும் போதும் என்பதே அது. அப்துல் அலிமும் தனக்கு HTML பற்றி கொஞ்சம் தெரியும் என கூற, அன்று முதல் முறையான பயிற்சி அளித்த தொடங்கியுள்ளார் சிபு அலெக்சிஸ்.
காலையில் காவல் பணி… மாலையில் சாப்ட்வேர் பயிற்சி… சரியாக எட்டுமாதம் தான் சாப்ட்வேரில் கைதேர்ந்தவராக மாறினார் அப்துல் அலிம். ஸோகோ நிறுவனத்தில் வைக்கப்பட்ட நேர்காணலிலும் திறமையை நிரூபிக்க, இன்று கம்பெனியின் சிறந்த SOFTWARE DEVELOPEMENT ENGINEER-ஆக பெயரெடுத்திருக்கிறார்.
தனது எட்டு ஆண்டு அனுபவம் குறித்து LINKED IN தளத்தில் அப்துல் அலிம் பதிவு வெளியிட, பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறார். செக்யூரிட்டியாக பணியை தொடங்கி சாப்ட்வேர் என்ஜினியராக உயர்ந்திருக்கும் அப்துல் அலிமுக்கு நிச்சயம் வைக்கலாம் ஒரு ராயல் சல்யூட்.
















