முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்வுக்கு பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்கள் தான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்,
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் சட்டவிரோத குடியேறிகள் இடம்பெறுவது அரசமைப்புச் சட்ட ஆன்மாவுக்கு ஏற்படும் களங்கம் என்று கூறினார். வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சிறப்பு தீவிர திருத்தத்தை, அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது என்று அமித் ஷா அறிவுறுத்தினார்.
சிறப்பு தீவிர திருத்தத்தை நிராகரிக்கும் போக்குடன் காங்கிரஸ் செயல்படுவதற்கு, வாக்கு வங்கி அரசியலே காரணம் என்றும் அமித் ஷா குற்றம்சாட்டினார். இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை கிடைக்க வேண்டுமே தவிர சட்டவிரோத குடியேறிகளுக்கு அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
கடந்த 1951ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்துக்கள் 84 சதவிகிதமும், முஸ்லிம்கள் 9.8 சதவிகிதம் இருந்தனர் என்றும், 2011ம் ஆண்டில் இந்துக்கள் எண்ணிக்கை 79 சதவிகிதமாக குறைந்த நிலையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 14.2 சதவிகிதமாக உயர்ந்துவிட்டதாகவும் அமித் ஷா கோடிட்டு காட்டினார். ஊடுருவல் அதிகரிப்பே இதற்கு காரணம் என்று கூறிய அவர், சட்டவிரோத குடியேறிகளுக்கு அரசியல் ரீதியில் பாதுகாப்பு அளிக்கக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.