புவிசார் அரசியலின் மையப் புள்ளியாக இந்தியா அமைந்திருக்கிறது. இந்தியாவின் ராஜ தந்திர நடவடிக்கைகளை உற்று நோக்குவதே அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகளுக்கு முக்கிய வேலையாக உள்ளது. உலகின் பலநாடுகளால் இன்னமும் அங்கீகரிக்கப் படாத ஆப்கான் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் முதல்முறையாக இந்தியாவுக்கு வந்திருப்பது சர்வதேச அளவில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாகப் பாகிஸ்தானுக்கு. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தான் என்ற ஒரு நாடு தோன்றுவதற்கு முன்பே, சிந்துசமவெளி நாகரீக காலத்தில் இருந்தே ஆப்கான்- இந்திய உறவு இயற்கையாக அமைந்துள்ளது. கலாச்சார ரீதியாக மட்டுமில்லாமல் வர்த்தக ரீதியாகவும் ஆப்கான்- இந்திய உறவு வளர்ந்து வந்துள்ளது.
1892ம் ஆண்டு, இந்தியாவின் தேசியக் கவி ரவீந்திரநாத் தாகூர் வங்காளத்தில் எழுதிய காபுலிவாலா என்ற புகழ்பெற்ற சிறுகதையில் காபூலிலிருந்து ஒரு வணிகரின் கதையை நேர்த்தியாகச் சொல்லியிருப்பார்.
1947 முதல் 2001 வரை, அமெரிக்க இரட்டை கோபுர பயங்கர வாத தாக்குதலில் இருந்து இன்று வரை என பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் உறவு இரண்டு பகுதியாக உள்ளது. எப்படி இருந்தாலும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்கிறது. அதே நேரத்தில் இந்தியா கல்வி, மின் உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த மேம்பாடு போன்ற சமூகத் துறைகளில் ஆப்கான் மக்களின் வளர்ச்சிக்கு முதலீடு செய்கிறது. ஆரம்பத்திலிருந்தே ஆப்கான் அரசை தனது கைப்பாவையாக வைத்துக்கொண்டு, இந்தியாவுக்கு எதிரான எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வந்தது.
அது மட்டுமில்லாமல் 1947 ல் இருந்தே லட்சக்கணக்கான ஆப்கான் மக்களை பாகிஸ்தான் இனப்படுகொலை செய்து வந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு தலிபான் அரசு வந்தவுடன் அந்த அரசை உடனடியாக அங்கீகரித்த நாடு பாகிஸ்தான் என்றாலும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்களை பாகிஸ்தான் கொன்று வருகிறது.
பாகிஸ்தானைப் போலப் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யாமல், சொந்தக் காலில் நிற்கக்கூடிய, முற்போக்கான, தீவிரவாதமற்ற ஆப்கானிஸ்தானை இந்தியா காண விரும்புகிறது. பெரும்பாலான ஆப்கான் மக்கள் அமைதி, பொருளாதார முன்னேற்றம், ஸ்திரத்தன்மை ஆகியவற்றையே விரும்புகிறார்கள், ஆப்கானிஸ்தான் தனது சுதந்திர இலக்குகளை அடைய இந்தியா தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு உதவும் ஐந்தாவது பெரிய நன்கொடையாளராக இந்தியா உள்ளது. ஆப்கானிஸ்தான் தேசிய இராணுவத்துக்குள் பல மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் இந்தியா வழங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசின் நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்டி கொடுத்துள்ளது. பாதுகாப்புத் துறையில் ஆயுதங்கள் வழங்கியதுடன் தலிபான் அரசு இராணுவத்தினருக்கு பயிற்சி அளித்துள்ளது.
விவசாயத்துக்கு உதவும் வகையில் சல்மா அணையைக் கட்டி தந்துள்ளது. இந்தியா இதுவரை ஆப்கானிஸ்தான் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்காகப் பல பில்லியன் டாலர்களுக்கு மேல் நிதி உதவி வழங்கியுள்ளது. ஆப்கான் மக்களில் 80 சதவீதத்துக்கும் மேல் இந்தியாவை நேர்மறையான நல்ல நாடு என்ற உணர்கின்றனர்.
தாலிபான்களை அழித்து ஒழிக்க வேண்டும் என் கங்கணம் கட்டி தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான் ஏற்கனவே எல்லைக்கோடு பிரச்னை இருக்கும் நிலையில், ஆப்கானுக்கு பாகிஸ்தான் மிகப் பெரிய பிரச்சனையாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் ஈரானுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டாலும், இஸ்ரேலுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தானிடம் நெருக்கம் காட்ட முடியாமல் உள்ளது ஈரான்.
ஆரம்பத்தில் பயங்கரவாதிகள் பட்டியலில் வைத்திருந்த ரஷ்யா, தலிபானை ஆதரிக்கத் தொடங்கினாலும், உக்ரைன் போரில் தீவிரமாக உள்ளதால் தாலிபனுக்கு உதவ முடியாத நிலையில் உள்ளது. ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் முடிவை எடுத்தவர் ட்ரம்ப். ஆனால் அதை செயல்படுத்தியவர் ஜோ பைடன்.
அமெரிக்காவால் தான் தலிபான் ஆட்சிக்கு வரமுடிந்தது. அரசு நடத்த தேவையான நிதி உதவியை அமெரிக்கா மற்றும் ஐநா சபை தான் தருகிறது என்றாலும், மேற்கை நம்பி இருப்பது ஆபத்து என்பது தாலிபான்களுக்குத் தெரியும். ஆசியாவில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான அச்சுறுத்தலாக ஆப்கானில் இராணுவத் தளம் அமைக்க அமெரிக்காவின் விருப்பத்துக்கு ஆப்கான் மறுப்பு தெரிவித்தததோடு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
தாலிபான் அரசை அங்கீகரித்த சீனா, ஆப்கானில் தூதரகத்தைத் திறந்துள்ளது. அது போல தாலிபான் தூதரகத்தைத் தங்கள் நாட்டில் அமைத்துக் கொடுத்துள்ளது. உள்கட்டமைப்புப் பணிகள், வீடுகள் சாலைகள் மற்றும் மேம்பாட்டு உதவிகளை சீனா செய்து வருகிறது. தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் ஆப்கானின் இயற்கை வளங்களைக் குறிவைத்து சீனா இறங்கியுள்ளது.
மேலும் இந்தியாவுடன் இணைந்து ஆப்கானிஸ்தானின் தூதர்களுக்குக் கூட்டாக சீனா பயிற்சி அளித்து வருகிறது. இந்நிலையில் தான், ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி முதல்முறையாக இந்தியாவுக்கு வந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
காபூலில் தூதரகத்தைத் திறப்பது, கூடுதல் காபூல்-டெல்லி விமானங்கள், திருப்பி அனுப்பப்பட்ட அகதிகளுக்கு வீடுகள் கட்டி தருவது, 6 புதிய மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவது, 20 ஆம்புலன்ஸ்கள், மருத்துவ உதவி, தடுப்பூசிகள், புற்றுநோய் மருந்துகள் உட்பட ஆப்கான் மருத்துவ மனைகளுக்கு MRI & CT ஸ்கேன் கருவிகளை வழங்குவது உட்பட இந்திய பல்கலைக்கழகங்களில் ஆப்கானிஸ்தான் மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கித் தருவது, என இந்தியா, தலிபான்களுடன் உறவை மீட்டெடுக்கிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கு மாற்றாகத் தலிபான்கள் மாற்று வழியைத் தேடுகிறார்கள். அதில் இந்தியாவையே முதன்மையாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தியாவுக்கும் இது ஒரு வாய்ப்பு. அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் விட்டுச் சென்ற இடத்தை சீனா வேகமாக நிரப்பப் பார்த்தாலும் தாலிபான் தானாக இந்தியாவின் பக்கம் சாய்ந்திருக்கிறது.
இந்தியாவும், ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும், அந்நாட்டை உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்பதையும் உறுதி செய்கிறது. சிறந்த மற்றும் வளர்ந்த ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியாவுடனான நட்புறவுதான் சிறந்த வழி என்பது தலிபான் களுக்குப் புரிந்திருக்கிறது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் மாறிவரும் சதுரங்கப் பலகையில், இந்தியாவின் பலத்தை நிரூபிக்கபட்டுள்ளது.