எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
லாரிகளுக்கான ஒப்பந்தம், நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
இதனை எதிர்த்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் அனுப்குமார் சமந்த்ராய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், லாரி உரிமையாளர்களின் போராட்டம் சட்டவிரோதமானது என்றும், போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த வேலை நிறுத்தம் காரணமாக எல்பிஜி கேஸ் நிரப்பும் ஆலைகளின் பணிகள் பாதிக்கப்படும் என்றும், பொதுமக்களுக்குச் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.