இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோஹித் சர்மா, புதிய டெஸ்லா மாடல் Y காரை ஓட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் சீனியர் ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நீண்ட இடைவேளைக்கு பிறகு களம் இறங்கவுள்ளனர்.
ரோஹித் சர்மா ஒருநாள் போட்டித் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், அவர் டெஸ்லா மாடல் Y காரை ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
அது தொடர்பான பதிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பயனர் ஒருவர், டெஸ்லா ஏன் விளம்பரம் செய்யத் தேவையில்லை என்பதற்கு இதுதான் காரணம் – இன்ஸ்டாகிராமில் 45 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட ரோஹித் சர்மா, ஒரு புதிய டெஸ்லா மாடல் Y காரை வாங்கியுள்ளார் எனக் கூறியிருந்தார்.
இந்தப் பதிவை எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் உரிமையாளரான எலான் மஸ்க், எக்ஸ் தளத்தில் ரீ-போஸ்ட் செய்துள்ளார்.
தனது குழந்தைகளின் பிறந்த நாள் எண்களான 30 மற்றும் 15 ஆகிய எண்களையே ரோகித் சர்மா தனது காருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.