ஹமாஸ் பயங்கரவாதிகளால் சிறைப் பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளில் ஒரே ஒரு இந்துவான பிபிபி ஜோஷி உயிருடன் மீட்கப்படுவாரா? என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது ஒரு நேபாள குடும்பம். காசாவை ஹமாஸிடமிருந்து கைப்பற்றிய பிபின் ஜோஷியின் வீடியோவை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருப்பது நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இஸ்ரேலிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள மேற்கு நேபாளத்தில் ஒரு குக்கிராமத்தில் அமைதியின்றி கையில் எப்போதும் தொலைபேசியுடன் அமர்ந்திருக்கிறார் மகானந்த ஜோஷி. மறந்தும் கூடத் தொலைபேசியை அவர் எங்கும் வைப்பதில்லை.
ஹமாஸ் பயங்கரவாதிகளால் காசாவுக்குக் கடத்திச் செல்லப்பட்ட தனது மகன் பிபின் ஜோஷியின் வருகைக்காகக் காத்து கொண்டிருக்கிறார். தொலைபேசி ஒலிக்கும் போதெல்லாம், அது தன் மகன் உயிரோடு வரும் செய்தியைத் தரக்கூடும் என்று பள்ளி ஆசிரியரான மஹானந்தா ஜோஷி, எதிர்பார்த்திருக்கிறார்.
கடத்தப்படுவதற்கு முந்தைய நாள் தன்னுடன் தொலைபேசியில் பேசிய மகனை, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இஸ்ரேல் இராணுவம் காட்டிய வீடியோவில் தான் பார்த்திருக்கிறார்கள். காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வீடியோ காட்சிகளில், இஸ்ரேல் இராணுவத்தினர் பிபின் ஜோஷியை அடையாளம் காணச் சொல்லிக் காட்டியுள்ளனர்.
30 வினாடிகளுக்கு மேல் நீளமுள்ள அந்த வீடியோவில், ஹமாஸ் பயங்கரவாதிகளின் வேண்டுகோளின் பேரில் ஜோஷி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. மகானந்தா ஜோஷி, அவரது மனைவி பத்மா மற்றும் பிபின் ஜோஷியின் தங்கை புஷ்பா ஆகியோர் இந்திய எல்லைக்கு அருகில் உள்ள காஞ்சன்பூர் மாவட்டத்தின் பிஸ்புரி மகேந்திரநகர் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
நேபாள பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், 60 சதவீத நேபாள மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் விவசாயம் உள்ளது. எனவே,நேபாள மக்கள் விவசாயம் சார்ந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்புகாக இஸ்ரேலுக்குச் செல்கிறார்கள். அப்படி, தான் கடத்தப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன் தான் பிபின் ஜோஷி இஸ்ரேலுக்குச் சென்றுள்ளார்.
பிபின் ஜோஷி வெளிநாடு செல்வது இதுவே முதல் முறையாகும். இஸ்ரேலில் விவசாய கல்வி கற்பதற்காகவும் அந்நாட்டு அரசின் அரசு உதவித்தொகை பெறுவதற்காகவும் விடாமுயற்சியுடன் சுதுர்பாசிம் பல்கலைக்கழகத்தில் விவசாயம் படித்து வந்தார் பிபின் ஜோஷி. உடன்படித்த 48 சக மாணவர்களுடன் 2023 செப்டம்பர் மாதம், கற்றலுடன் கூடிய வேலைவாய்ப்பு என்ற 11 மாத திட்டத்தின் கீழ், இஸ்ரேலில் சென்று படிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேபாள விவசாய மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தெற்கு இஸ்ரேலைச் சுற்றியுள்ள வெவ்வேறு பண்ணைகளுக்கு நியமிக்கப்பட்டனர் . சிலர் காளான் அல்லது எலுமிச்சை பண்ணைகளில் வேலை செய்தனர், சிலர் கோழி அல்லது பால் பண்ணையில் பணியில் இருந்தனர்.
பிபின் ஜோஷி தனது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம், தான் வேலை செய்த கிப்புட்ஸ் அலுமிமில் உள்ள எலுமிச்சை தோட்டத்தை காட்டியதாகவும், ஊருக்குத் திரும்பியதும் சொந்தமாக எலுமிச்சை தோட்டம் அமைப்பது குறித்தும் பேசியதாகவும் பழைய நினைவுகளை பிபினின் தாயார் பத்மா பகிர்ந்துள்ளார்.
முதல் மாத சம்பளத்தைப் பெற இருந்த நிலையில் தான், 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, ஹமாஸ் இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 1200 பேரில் 10 பேர் நேபாள மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பணயக் கைதிகளாக ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவுக்குச் கடத்திச் சென்ற 250 பேரில் நேபாளத்தைச் சேர்ந்த பிபின் ஜோஷியும் ஒருவர். முதல் போர் நிறுத்தத்தின் போது பிபின் ஜோஷி விடுவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போன நிலையில் இந்தமுறை அவரது வீடியோ கொஞ்சம் நம்பிக்கையைத் தந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹமாஸ் சிறைப் பிடித்துச் சென்ற பணயக்கைதிகளின் குடும்பங்களுடன் பணியாற்றி வரும் இஸ்ரேல் அதிபர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஐசக் ஹெர்சாக், இஸ்ரேலியராக இருந்தாலும் சரி, வெளிநாட்டினராக இருந்தாலும் சரி, அனைத்து பணயக்கைதிகளையும் ஒரே மாதிரியாகப் பார்ப்பதாகவும் அனைவரையும் விடுவிக்க உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்களை உயிருடன் வைத்திருக்கும் ஒரே விஷயம், தங்கள் மகன் திரும்பிவருவான் என்ற நம்பிக்கை மட்டுமே என்று பிபின் ஜோஷியின் பெற்றோர் சொல்கின்றனர். அண்ணன் வந்திருப்பான் என்ற எதிர்பார்ப்போடு தங்கை தினமும் பள்ளியில் இருந்து வீடு திரும்புகிறாள் பாசத்தோடு.
பிபின் ஜோஷியின் 82 வயது பாட்டி, பேரனின் மீண்டும் பார்க்காமல் இறந்துவிடுவேனோ என்ற பயத்தால் கலங்கி இருக்கிறார். இப்படியான சுழலில் பிபின் ஜோஷியின் வீடியோ அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கையின் நங்கூரமாக உள்ளது.