மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஷோபாபூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒடிசாவை சேர்ந்த மாணவி ஒருவர், 2-ம் ஆண்டு இளநிலை மருத்துவம் பயின்று வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மாணவி, தனது ஆண் நண்பருடன் உணவு அருந்துவதற்காக வெளியே சென்றிருந்தார். அப்போது வந்த மர்ம கும்பல், இளைஞரை தாக்கிவிட்டு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த மாணவி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தைப்போல் மீண்டும் ஒரு கொடூரம் அரங்கேறி இருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இதுதொடர்பாக மேற்குவங்க டிஜிபிக்கு மகளிர் ஆணைய தலைவர் விஜயா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் சம்பவம் தொடர்பாக 5 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.