தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
Make my trip உள்ளிட்ட செயலிகள் மூலம் முன்பதிவு செய்யு பயணிகளுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
நெல்லை செல்வதற்கு வழக்கமாக ஆயிரத்து 800 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 5000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே போல சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமான நாட்களில் 700 முதல் ஆயிரத்து 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் சூழலில், தற்போது அதிகபட்சமாக 4 ஆயிரத்து 100 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்வதற்கு வழக்கமான நாட்களில் 1500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது நான்காயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று திருச்சிக்கு 3 ஆயிரத்து 600 ரூபாய் வரையும், கோவைக்கு செல்ல 3 ஆயிரம் ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எனவே ஆம்னி பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.