காசாவில் போரை நிறுத்தி அமைதியை மீட்பது குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-காசா இடையேயான போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், 60 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சி காரணமாக, எகிப்து நாட்டின் ஷர்ம்-எல்-ஷேக் நகரில் இருதரப்பினரிடையே 3 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் முடிவில் முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ,இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து வெளியேறத் தொடங்கியது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகள் நாளை விடுவிக்கப்பட உள்ளனர். இதனிடையே, காசாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் எகிப்து நாட்டில் நாளை நடைபெற உள்ளது.
செங்கடல் பகுதியில் உள்ள ஷர்ம் எல் ஷேக் நகரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எகிப்து அதிபர் உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதை அடுத்து இறுதிகட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல்-சிசி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். இருப்பினும் மோடியின் எகிப்து பயணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.