கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவலில், கேரளாவில் அமீபா தொற்றால் இதுவரை 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கோழிக்கோடு, மலப்புரத்திலும் தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டில் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவியதை அடுத்து, மூளைக்காய்ச்சல் தொடர்பான நோய் தொற்றுகளை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியதன் பயனாக, தற்போது மூளைக்காய்ச்சல் பற்றிய தொற்றுகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக பெறப்பட்டு வருவதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.