கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பட்டாசு போல வெடித்த சிறுவனின் பேச்சும், அதீத நம்பிக்கையும் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. இது டிவி நிகழ்ச்சியையும் தாண்டி இன்றைய கல்வி முறை, நவீனகால பெற்றோர் பற்றிய விவாதத்தையும் தூண்டியுள்ளது.
சோனி டிவியில் ஒளிபரப்பாகும் கவுன் பனோகா குரோர்பதி நிகழ்ச்சி இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியைப் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார். அக்டோபர் 9ம் தேதி ஒளிபரப்பான கேபிசி 17 ஜூனியர்ஸ் எபிசோடில் குஜராத் மாநிலம் காந்தி நகரைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவர் இஷித், போட்டியாளராகப் பங்கேற்றிருந்தார். போட்டியின் விதிகள் குறித்து ஒரு தொகுப்பாளராக அமிதாப் பச்சன் விளக்க முற்பட்டபோது, எனக்கு விதிகள் தெரியும், இப்போது உட்கார்ந்து அவற்றை எனக்கு விளக்க வேண்டாம் என்று கூறியது பார்வையாளர்களிடம் முக சுழிப்பை ஏற்படுத்தியது.
அமிதாப் பச்சன் கேட்ட கேள்விகளுக்கு, ஆப்ஷன்களை தெளிவுபடுத்தும் முன்பாக, சிறுவன் இஷித் அதிரடியாகப் பதிலளித்து பார்வையாளர்களை ஆச்சர்யமூட்டினார்.
அமிதாப் பச்சன் முன்பு முரட்டுத்தனமாக, அதீத தன்னம்பிக்கையுடன் அந்தச் சிறுவன் பதிலளித்த விதம் இணையதளத்தில் பெரும் விவாதத்தையும் கிளப்பியது. இறுதியாக வால்மீகி ராமாயணத்தின் முதல் காண்டத்தின் பெயர் என்ன என்ற கேள்விக்கு, ஆப்சன்களை கேட்ட அந்தச் சிறுவன், சரியான பதிலை அளிக்கத் தவறிவிட்டார்.
அந்தச் சிறுவன் துணிச்சலாக இருந்தபோதும், ஒரு கேள்விக்குச் சரியாகப் பதிலளிக்க தவறியது, பரிசுத் தொகையை இழந்தது நெட்டின்களை விமர்சிக்கத் தூண்டியது. கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர், தொகுப்பாளரை வார்த்தைகளால் திட்டுவதும் இதுதான் முதல்முறையாகப் பதிவானது. இந்த விவாதம் இந்த நிகழ்ச்சியோடு நின்றுவிடவில்லை. தற்போது பள்ளிகளில் கற்பிக்கும் முறை அதீத நம்பிக்கை கொண்ட குழந்தைகளை வளர்த்தெடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதுமட்டுமின்றி நவீன பெற்றோர்களைப் பற்றிய ஆவேசமான விவாதமாகவும் மாறியுள்ளது. பெற்றோர்கள் மட்டுமல்ல, பள்ளிகளும் அதிக தன்னம்பிக்கை கொண்ட குழந்தைகளை வளர்க்கின்றன. ஒரு இளம் போட்டியாளரின் அதீத தன்னம்பிக்கைக்கு பெற்றோரைச் சமூக ஊடகங்கள் விரைவாகக் குறை கூறினாலும், பெரிய குற்றவாளி பள்ளிகளாக இருக்கலாம். இந்தியாவில் பள்ளிகள் அடுத்த தலைமுறையை எவ்வாறு வடிமைக்கிறது என்பதோடு தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது.
தேர்வு, தரவரிசை, சரியாக விடையளித்தல் போன்றவற்றிற்கு பழக்கப்படும் மாணவர்களுக்கு, புரிதல் குறைவாக இருந்தாலும் கூடச் சரியாகப் பேச, பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். பாடப்புத்தகத்தை கேள்வி கேட்கும் ஒரு குழந்தைகளைவிட, அதை குறைவின்றி சொல்பவர் புத்திசாலியாகக் கருதப்படுகிறார்.
இது புத்தகத்தை தாண்டிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு விழிபிதுங்கும் சூழலை குழந்தைகள் மத்தியில் உருவாக்குவதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். அறியாமை என்பது பலவீனம் அல்ல, கற்றலின் ஆரம்பம் என்பதை நமது பள்ளிகள் கற்பிக்க வேண்டும், அதிக மதிப்பெண்களைப் போலவே தாழ்வு மனப்பான்மையையும் கொண்டாடும் வகுப்பறைகளும், மனப்பாடம் செய்து கற்றுக் கொள்வதை விட, சிந்தனையைப் பாராட்டி ஊக்குவிக்கும் ஆசிரியர்களும் இன்றைய கல்விமுறைக்கு தேவை.
திறமை இல்லாத தன்னம்பிக்கை என்பது வெறுமனே ஈர்க்கக் கூடியதாக இருக்கலாம், ஆனால் அது கண்ணாடி போன்று உடையக்கூடியது. பெற்றோரும் சமூகமும் குழந்தைகளுக்குப் பணிவு மற்றும் மரியாதையை கற்பிக்க வேண்டும்.
அதிகப்படியான தன்னம்பிக்கை மற்றும் மோசமான பழக்கவழக்கங்கள் கல்வி முறையை மட்டுமல்ல, தனிப்பட்ட வளர்ப்பையும் பிரதிபலிக்கின்றன. எனவே உண்மையான கல்வி இரண்டையும் வலுப்படுத்த வேண்டும், சீர்திருத்தமானது வகுப்பறையில் தொடங்கப்பட வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.
















