டாஸ்மாக் முறைகேட்டில் மிகப்பெரிய ஊழல் மற்றும் சட்டவிரோதப் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக் குற்றம்சாட்டியுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு குறித்து அமலாக்கத்துறைச் சோதனை நடத்தியதற்கு எதிராகத் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிகளவில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதால் சோதனை மேற்கொண்டதாகவும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை வாதிட்டது.
டாஸ்மாக் கடைகள், மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளதாகத் தெரிவித்த அமலாக்கத்துறை, மிகப்பெரிய முறைகேட்டை எப்படி வெறுமனே விடுவது என நீதிபதிக்குக் கேள்வி எழுப்பியது.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் முறைகேட்டில் செந்தில்பாலாஜிக்குத் தொடர்பு உள்ளதாகவும் குற்றம்சாட்டியது.
இதனிடையே தமிழக அரசின் வாதத்தையும் கேட்ட நீதிபதி, அமலாக்கத்துறைச் சோதனைக்கு இடைக்கால தடைவிதித்த உத்தரவு தொடரும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.