தீபாவளி மற்றும் கார்த்திகைத் தீபத் திருவிழா நெருங்கி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலோ அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். இதற்கு என்ன காரணம்? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
தீபாவளி பண்டிகையை வரும் திங்கள் கிழமைக் கொண்டாட பலரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். தீபாவளி அன்றும் அதனைத் தொடர்ந்து வருகின்ற கார்த்திகைத் திருநாளின்போதும் வீடுகளை அகல்விளக்குகள் ஏற்றி அலங்கரிப்பது வழக்கம்.
ஆனால் அகல்விளக்குத் தயாரிப்புக்கு புகழ்பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்திலோ அதற்கான பணிகளில் தொழிலாளர்கள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுங்கான்கடை, தாழக்குடி, கண்டன்விளை, புலியூர்குறிச்சி, அருமனை, காப்புக்காடு, புதுக்கடை உள்பட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழில் நடைபெற்று வருகிறது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ஒட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக அகல்விளக்குகள் தயாரிக்கும் தொழில் படிப்படியாகத் தொய்வடைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடைப் பகுதியில் மூன்று தலைமுறைகளாகப் பல குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. பண்டிகைக் காலங்களுக்கு ஏற்றவாறு, களிமண்ணால் செய்யக்கூடிய பொருட்களைத் தயாரித்து அதை விற்பனைச் செய்து வருகின்றனர்.
இந்தத் தொழிலுக்கு தேவையான களிமண் குமரிமாவட்டத்தின் பல்வேறு குளங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் விலைக் கொடுத்து கொண்டு வரப்படுகிறது. இதைக் கொண்டு சமையல் செய்யத் தேவையான அடுப்பு, சட்டி, பானை, சிலைகள், அகல் விளக்குகள், பொங்கல் பானை, நவராத்திரி ஸ்பெஷல் கொலு பொம்மைகள் உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களைத் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை, அதைத் தொடர்ந்து வரும் கார்த்திகைத் தீபத் திருவிழாவிற்க்காக மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகள் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபடுவது வழக்கம். ஆனால் சில வருடங்களாக நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. அகல்விளக்குகளுக்குப் போதிய விலைக் கிடைப்பதில்லை, புதிய அகல்விளக்குகளை வாங்க மக்கள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை என்பதே மண்பாண்ட தொழிலாளர்களின் வேதனையாக இருக்கிறது.
கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிற்சாலைகளில் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி அகல்விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் கார்த்திகைத் திருவிழாவின்போது அனைத்து மாவட்ட வியாபாரிகளும் இங்கு முகாமிட்டு, அகல் விளக்குகளை வாங்கிச் செல்கின்றனர். இப்படிப் பெரிய தொழிற்சாலைகளுடன் போட்டி போடும் அளவிற்குத் தங்களுக்கு வசதி இல்லை என்றும் வேதனையுடன் சொல்கின்றனர்.
தற்போது அடுக்கு விளக்குகளை மட்டுமே தயார் செய்து வருவதாகவும் அகல் விளக்குகள் செய்வதில் ஆர்வம் இல்லை என்றும் தெரிவிக்கிறார்கள் மண்பாண்ட தொழிலாளர்கள். போதிய வருமானம் இல்லாததால் வேறு தொழில்களுக்கு செல்லும் நிலையில் இருப்பதாகவும் குமுறுகின்றனர்.
ஒளிவீசும் திருநாட்களாக தீபாவளியும் கார்த்திகைத் திருநாளும் கருதப்படுகின்றன. ஆனால் அந்தப் பண்டிகைகளுக்கான அகல்விளக்குகள் தயாரிக்கும் தொழிலாளர்களோ எதிர்காலம் இருண்டு விடுமோ என்ற அச்சத்தில் இருப்பதோடு தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.