தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் 17,18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – போத்தனூர் இடையே வரும் 17ஆம் தேதியும், மறுமார்க்கத்தில் வரும் 18ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 21ஆம் தேதி ஒரு வழி சிறப்பு விரைவு ரயிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதேபோல், தாம்பரம் – கன்னியாகுமரி இடையே 16 மற்றும் 18ஆம் தேதிகளிலும், 17 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து செங்கல்பட்டிற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு துவங்கும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.