மாதா அமிர்தானந்தமயியின் பிறந்தநாளை ஒட்டி கேரளாவில் சேவை கண்டுபிடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக நடைபெற்ற கண் காட்சி பலரையும் கவர்ந்தது. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
அம்மா என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமயியின் 72 -வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அவர் பிறந்த தினமான கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கியது. அமிர்தவர்ஷம் 72 என்ற பெயரில் நாடு முழுவதும் வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அமிர்தபுரியில் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் அறிவியல் கண்காட்சிகள் களைகட்டியுள்ளன.
இம்மாதம் இறுதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
மாதா அமிர்தானந்தமயியின் சேவைகள் தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. சுனாமி, நிலச்சரிவு உட்பட பல்வேறு பேரிடர் தருணங்களில் பத்து மில்லியன் மக்களுக்கு உணவு வழங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன.
உலகளவில் தன் பக்தர்கள் 42 கோடி பேரை நேரில் சந்தித்து துயரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு சேவையாற்றி ஆசி வழங்கியது, இந்தியா முழுவதும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 47 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுத்தது, 2200 கிராமங்களை தத்தெடுத்து அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது என மாதா அமிர்தானந்தமயியின் அரிய சேவைகளை புகைப்படங்களும், வீடியோக்களும் தெளிவாக விளக்குகின்றன.
நவீன கண்டு பிடிப்புகள் குறித்த கண்காட்சி பலரையும் கவர்ந்துள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட அலங்கார பொருட்கள், வண்ண ஓவியங்களை பலரும் பார்த்து ரசிக்கின்றனர். வீட்டு உபயோக பொருட்களான சோபா, சேர்,டீ பா உள்ளிட்டவற்றையும் அமிர்தா கல்லூரி மாணவ மாணவிகள் தயாரித்து காட்சிப்படுத்தி உள்ளனர். மாசடைதல், வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றில் இருந்து பூமியை பாதுகாப்பதற்கான வழிமுறைகளும் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மாதா அமிர்தானந்தமயியின் பிறந்தநாளை ஒட்டி சேவை கண்டுபிடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி பலரையும் கவர்ந்துள்ளது. ஆர்வத்துடன் கண்டுகளிக்கும் மாணவ மாணவிகள் மாதா அமிர்தானந்தமயியின் புகைப்படத்தையும் வணங்கிச் செல்கின்றனர்.