சுய சார்பு குறித்து சிந்தித்ததால் தான், ‘ஜோஹோ’ நிறுவனம் உருவானது என்று அந்நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 40வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ‘ஜோஹோ’ ஐ.டி., நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டினார்.
பல்வேறு பாடப் பிரிவுகளில் 1,871 மாணவ – மாணவியருக்கு பட்டங்களும், சாதித்த 75 மாணவ – மாணவியருக்கு தங்க பதக்கங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாசலம், இணைவேந்தர் செங்குட்டுவன், துணைவேந்தர் உமாசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஶ்ரீதர் வேம்பு, அதிநவீன தொழில்நுட்பம் நமக்கு தேவைப்படும்போது, வெளிநாடுகள் நமக்கு அளிப்பதில்லை என்றும், ஏனென்றால் நாம் வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக வளரக்கூடாது என்ற எண்ணம் தான் என்றார்.
எனவே, நாம் சுயசார்பாக இருப்பது அவசியம் என்றும், சுய சார்பு குறித்து சிந்தித்ததால் தான், ‘ஜோஹோ’ நிறுவனம் உருவானது என்றும் கூறினார். மேலும், AI தொழில்நுட்ப காரணமாக எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு குறையும் என்கின்ற எண்ணம் வேண்டாம் என்றும், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.