தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு மற்றும் சார் பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிமம் மற்றும் தடையில்லாச் சான்று வழங்குவதற்காக தீயணைப்புத் துறையினர் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் உள்ள தீயணைப்பு மீட்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல், திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்துள்ளதாகவும், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், புதுக்கோட்டை பொதுப்பணித்துறை தெற்கு வெள்ளாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், செயற்பொறியாளர் சண்முகவேலுவின் மேஜையில் இருந்து மட்டும் இரண்டு லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சார் பதிவாளரின் அறை மற்றும் கார்களிலிருந்து கணக்கில் வராத 72 ஆயிரத்து 100 ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 1.88 லட்சம் ரூபாய் சிக்கியது. ரகசிய தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.சாந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், அன்பழகன் மாவட்ட ஆய்வுகுழு அலுவலக ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் கொண்ட குழுவினர் பண்ருட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில்வராத சோதனையில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் 52 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தலைமறைவாகியுள்ள அலுவலர் சக்திவேலை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வருகின்றனர்.