ரிதன்யாவின் செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கணவர் கவின்குமார் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ரிதன்யாவுக்கு சொந்தமான 2 செல்போன்களை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டுமென கவின் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்த விசாரணையில், தோழிகளிடம் ரிதன்யா பேசிய விவரங்கள் போனில் இருப்பதாகவும், அந்த விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கவின்குமார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, இரண்டு செல்போன்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.