சாலை ஓரங்களில் அரசியல் கட்சிகள் தற்காலிகமாகக் கொடிக்கம்பங்கள் வைக்க ஒரு கம்பத்துக்கு ஆயிரம் ரூபாய் வசூலிக்கும்படி, தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணையும், வழிகாட்டு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, அனுமதியின்றி கொடி கம்பங்கள் வைப்போருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காவல்துறை மீது அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், சாலை ஓரங்களில் கொடி கம்பங்கள் வைக்க அனுமதி கேட்பவர்களிடம் ஒரு கொடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வசூலிக்க வேண்டும் என்றும் இது அரசுக்கு வருவாயை ஈட்டிக் கொடுக்கும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
கொடி கம்பங்கள் அமைப்பது தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அனைத்து துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, தலைமைச் செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
அனுமதியின்றி தற்காலிகமாகக் கொடிக்கம்பங்கள் வைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராகத் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 12 ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.