லக்னோவில் புதிதாகத் திறக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி மையத்தில் இருந்து, இந்திய பாதுகாப்புத் துறைக்கு வழங்க முதல் தொகுப்பு தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
பாதுகாப்புத் துறையில் முக்கியமான முன்னேற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இந்தியா, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் புதிய பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி மையத்தைத் திறந்தது.
இந்நிலையில், வரும் 18-ம் தேதி பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் தொகுப்பு இந்திய பாதுகாப்புத் துறையிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்க தயார் நிலையில் உள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மாநில தொழிற்சாலை பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ், பஹட்கோன் பகுதியில் 80 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய உற்பத்தி முறைமைகள் மற்றும் தரக்கட்டுப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த மையத்தில், முதற்கட்டமாக ஆண்டுக்கு 80 முதல் 100 பிரம்மோஸ் ஏவுகணைகள் வரையும், அடுத்தகட்டமாக 150 ஏவுகணைகள் வரையும் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது.
இந்தியாவின் DRDO மற்றும் ரஷ்யாவின் NPO கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி மையம் உருக்கப்பட்டது. இதில் 50.5 சதவீத பங்குதாரராக இந்தியாவும், 49.5 சதவீத பங்குதாரராக ரஷ்யாவும் உள்ளனர்.
மேக் 3 வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்தப் பிரம்மோஸ் ஏவுகணைகள், 290 முதல் 400 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டுள்ளது.
நிலம், வான்பரப்பு, கடல் என எந்தத் தளத்திலிருந்தும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணைகள், ரேடாரை தவிர்த்துத் துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. பாதுகாப்புத் துறையில் நமது நாடு சுயத்திறன் அடைவதில், லக்னோ பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி மையம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதன் மூலம் உள்ளூர் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதுடன், இதற்குத் தொடர்புடைய தொழிற்சாலைகளும் வளர்ச்சி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 18-ம் தேதி நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில், பிரம்மோஸ் ஏவுகணைக்கான முதல் தொகுப்பு இந்திய பாதுகாப்புத் துறையிடம் வழங்கப்பட உள்ளது.
“மேக் இன் இந்தியா” திட்டம்மூலம் உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்து வரும் இந்திய அரசு, நாட்டின் உற்பத்தி திறனையும், வேலைவாய்ப்பையும் அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அதற்கு முக்கிய உதாரணமாக விளங்கும் லக்னோ உற்பத்தி மையம், பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் நம் நாடு பிற நாடுகளை சார்ந்து இருக்காமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட வித்திட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.