சர்வதேச அளவில், மின்சார வாகனத்துறை ஒரு முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. மின்சார வாகனங்கள் மீதான மக்களிடையே ஈர்ப்பு குறைந்து வருவதால், விற்பனையை அதிகரிக்க உலகளாவிய கார் நிறுவனங்கள் புது திட்டங்களைத் தீட்டி வருகின்றன. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
2012-ல் அமெரிக்காவில் மின்சார வாகனங்களின் மாடல்கள் 20க்கும் குறைவாக இருந்தன. வியக்கத் தக்க வகையில் கடந்தாண்டு, கிட்டத்தட்ட 130-ஆக அதிகரித்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் அனைத்து புதிய வாகன விற்பனையிலும் மின்சார வாகனங்கள் குறைந்தது 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசின் ஆணையை ரத்து செய்ய ட்ரம்ப், கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, மின்சார வாகனத் துறை பெரும் சரிவைச் சந்தித்தது. பொதுவாகவே, உலகளவில் மின்சார வாகனங்களை வாங்கும் விருப்பம் குறையத் தொடங்கியுள்ளது. மின்சார வாகனத்துறை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்த அரசின் ஊக்கத்தொகைகள் ரத்து செய்யப்பட்டதால், உற்பத்தியாளர்களின் நீண்டகால திட்டங்கள் முடங்கி உள்ளன.
அதிக முன்பண செலவுகள் ஒருபுறமிருக்க, சார்ஜிங் உள்கட்டமைப்பு இல்லாத நிலையில், மின் கட்டணம் அதிகரித்து வரும் நாடுகளில், மின் வாகனங்களை வாங்க பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.
EV பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களான லித்தியம், நிக்கல் மற்றும் கோபால்ட் ஆகியவற்றின் விலைகள் நிலையற்றதாக உள்ளதால், மின்சார வாகன விலையும் அதிகமானதாக உள்ளது. மேலும், உள்ளூரில் பேட்டரி ஆலைகள் வந்தாலும், இந்த மின் வாகனச் செலவுகள் அதிகமாகவே உள்ளன.
சீனா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு வெளியே சார்ஜிங் நெட்வொர்க் சீரற்றதாகவே உள்ளது. சார்ஜிங் நெட்வொர்க் அமைக்கப்படாத நிலையில், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதாக வாகன உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வடிவமைக்க, உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் செலவுகள் அதிகம் என்பதால் விலையும் அதிகமாக உள்ளது. சந்தையின் தேவை சரியாகத் தெரியாத நிலையில், உற்பத்தியை அளவிடுவது ஆபத்தான வணிகமாக EV சந்தையை மாற்றியுள்ளது. உலகளாவிய பணவீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதங்கள், கார் கடன்களில் ஏற்றத்தைக் கொண்டுவந்துள்ளன.
இதனால், மின்சார வாகனங்களின் விலையும் அதிகமாகியுள்ளன. இந்நிலையில், மின்சார வாகனத் துறை தன் எதிர்காலத்தை மறுவரையறை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் மின்சார வாகனத் துறையிலும் இந்தியா தன்னிறைவை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. மின்சார வாகனத் துறையை மேம்படுத்த PM E-DRIVE திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
2024 அக்டோபர் 1ம் தேதி முதல் 2026 மார்ச் 31ம் தேதி வரை இந்தத் திட்டத்துக்காக 10,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் வாங்குவதை ஊக்குவித்தல், சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் நாடு முழுவதும் மின்சார வாகன உற்பத்தியை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
மத்திய அரசின் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் மின்சார வாகன உள்கட்டமைப்பில் இந்தியா குறிப்பிடத் தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இந்த ஆண்டு கியா, மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் போன்ற முக்கிய நிறுவனங்கள் திட்டமிடப்பட்டுள்ள 28 வாகன வெளியீடுகளில் 18 மின்சார வாகனங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 2023 நிதியாண்டில் இந்தியாவில் மின்சார வாகன விற்பனை 1.52 மில்லியன் யூனிட்களாக இருந்தது.
கடந்தாண்டு 1.75 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது ஆண்டுக்கு 40.31 சதவீத வளர்ச்சியாகும். மின்சார வாகன விற்பனை 43 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் மின்சார வாகன விற்பனை 9.32 மில்லியன் யூனிட்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மின்சார SUV ரக வாகனங்கள் சுமார் 61 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், மின் வாகன விற்பனையில் இரு சக்கர வாகனங்களின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளன. மேலும் மின்சார பேருந்துகள் மற்றும் மின்சார லாரிகள் போன்ற வணிக வாகனங்களின் உற்பத்தியையும் இந்தியா வேகப்படுத்தி வருகிறது. மின்சார வாகனப் புரட்சியிலும் இந்தியா உலகை வழிநடத்தும் என்று கூறப்படுகிறது.