செயலிழந்த சிறுநீரகங்களுடன் ஒருவர் 20 ஆண்டுகளாக வாழ்வது மருத்துவ அதிசயம் தானே. அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் தலைசிறந்த கிருஷ்ண பக்தரான பிரேமானந்த் ஜி மகராஜ். மருத்துவ ரீதியாகச் சாத்தியமே இல்லாத ஒரு விஷயம் இவரது வாழ்க்கையில் எப்படி சாத்தியமானது? இந்தச் செய்தி தொகுப்பில் காணலாம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மத்திய தெற்கு பகுதியில் அமைந்துள்ள விருந்தாவனம் நகரம், புராணங்கள் மூலம் பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த புண்ணிய பூமியாகக் கருதப்படுகிறது. கோவில்கள், ஆசிரமங்கள் நிறைந்து காணப்படும் இந்த நகரில்தான் தலைசிறந்த கிருஷ்ண பக்தரான பிரேமானந்த் ஜி மகராஜ் வாழ்ந்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக முழுமையாகச் செயலிழந்த சிறுநீரகங்களுடன், மருத்துவ ரீதியாகச் சாத்தியமே இல்லாத ஒரு வாழ்வை அவர் தொடர்ந்து வருகிறார்.
பிரேமானந்த் ஜி மகராஜின் சுய ஒழுக்கம், ஆன்மிக நம்பிக்கை மற்றும் தளராத மன உறுதியே இந்த அசாத்தியமான வாழ்வை நிஜமாக்கி காட்டியிருப்பதாக அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். AUTOSOMAL DOMINANT POLYCYSTIC KIDNEY DISEASE என்ற மரபணு நோயால் கடந்த காலங்களில் மகராஜின் சிறுநீரகங்கள் படிப்படியாகச் செயலிழந்தன.
உலக அளவில் ஆயிரத்தில் ஒருவருக்கே இந்த நோய் ஏற்படுவதாக மருத்துவ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் பிரேமானந்த் ஜி மகராஜிற்கு, இன்று வரை அவரது வாழ்க்கையின் ஆதாரமாகத் திகழ்வது மருத்துவர்கள் வழங்கும் டயாலிசிஸ் சிகிச்சைதான். நாளொன்றுக்கு 5 மணி நேரம் என வாரத்தில் பலமுறை டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பிரேமானந்த் ஜி மகராஜ் உட்படுத்தப்படுகிறார்.
இந்தச் சிகிச்சை மகராஜின் உடலில் மிகுந்த களைப்பை ஏற்படுத்தினாலும், ஒருநாளும் அவர் தனது ஆன்மிக செயல்களை நிறுத்தியதில்லை. வழக்கம்போல் பக்தர்களை சந்தித்து ஆன்மிக சொற்பொழிவுகளை ஆற்றும் பிரேமானந்த் ஜி மகராஜ், தனது ஆசிரம பணிகளிலும் தவறாமல் ஈடுபடுவதாக அவரது பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
தொடர் சிகிச்சையால் தனது முகத்தில் வெளிப்படும் சோர்வு, உடல் வீக்கம் போன்றவற்றைக் கூட, பிரேமானந்த் ஜி மகராஜ் ஆன்மிக உறுதியுடன் எதிர்கொண்டு வருகிறார். 20 ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சையில் உயிர் வாழ்வது ஒரு சாதனைஎனக் கூறும் மருத்துவர்கள், அதற்குத் தேவைப்படும் உணவு, ஒழுக்கம், தண்ணீர்அளவுக் கட்டுப்பாடு, வாழ்க்கை ஒழுங்கு போன்றவற்றை மகராஜ் மிகுந்த கவனத்துடன் பின்பற்றிவருவதாகத் தெரிவிக்கின்றனர்.
பல பக்தர்கள்அவருக்குச் சிறுநீரக தானம் மேற்கொள்ள முன்வந்தபோதும் அதனை புன்சிரிப்புடன் மறுத்துவிட்ட மகராஜ், தனக்காக யாரும் தங்கள் உறுப்பை தியாகம் செய்ய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்தத் தன்னலமற்ற முடிவு பிரேமானந்த் ஜி மகராஜின் ஆன்மிக தத்துவத்தின் பிரதிபலிப்பாகப் பார்க்கப்படுகிறது.
பிரார்த்தனை, தியானம், சிறிது நேர உடற்பயிற்சி என வழக்கம்போல் தொடங்கும் அவரது நாள், நீண்ட நேர டயாலிசிஸ் சிகிச்சையுடன் முடிவுக்கு வருகிறது. சோர்வு உடலை வாட்டி வதைக்கும்போதும் தனது நிலையை மன அமைதியுடன் ஏற்றுக்கொள்கிறார் பிரேமானந்த் ஜி மகராஜ். அவரின் இந்த உறுதியும், அமைதியுமே அவரை காணும் பக்தர்கள் பலருக்கு பல போதனைகளை அளிக்கிறது.
உடலின் பலம் குறைந்தாலும் மனமும், நம்பிக்கையும் இணைந்தால் மனிதன் எத்தகைய இன்னலையும் தாண்ட முடியும் என்பதை பிரேமானந்த் ஜி மகராஜ் தனது வாழ்க்கை மூலம் உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விதிகளுக்கு மாறாக வாழ்ந்து வரும் பிரேமானந்த் ஜி மகராஜ், மருத்துவ உலகிற்கும், ஆன்மிக உலகிற்கும் ஒரு வாழும் எடுத்துக்காட்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.