ஆந்திராவில் முதலீடுகள் அதிகரித்து வருவதால் அண்டை மாநிலங்கள் எரிச்சலில் உள்ளதாக அமைச்சர் நாரா லோகேஷ் விமர்சித்துள்ளார்.
ஆந்திர மாநில அரசு இதுவரை 120 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது. குறிப்பாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் ஏஐ மையம் அமைக்க இருப்பது மிகப்பெரிய முதலீடாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், முதலீடுகள் அதிகரிப்பு குறித்து ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
அந்தப் பதிவில், “ஆந்திர உணவு காரமாக இருக்கும். அதேபோல் தான் எங்களது முதலீடுகளும். இதனால் சில அண்டை வீட்டார்கள் எரிச்சலை உணர்கின்றனர்” என விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் கர்நாடகாவில் தொழில் செய்வதில் நிறைய பிரச்னைகள் உள்ளதாக மைசூரில் ரம் தயாரிக்கும் தொழிற்சாலை அதிபர் ஒருவர் வேதனையை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவரை தொடர்பு கொண்டு உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம் என அழைப்பு விடுத்தது ஆந்திர அரசு.
கர்நாடகாவில் இருந்து தொழிற்சாலைகளை கைப்பற்ற முயல்வதாக ஏற்கனவே சித்தராமையா அரசு கடுப்பில் இருக்கும் நிலையில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷின் பதிவு, எரியும் நெருப்பில் எண்ணைய் ஊற்றுவதாக அமைந்துள்ளது.