பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்த ஒரு கிராமத்து இளைஞர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஆஃபீஸ் பாயாகத் தனது பணியைத் தொடங்கி இன்று இந்தியாவின் சொந்த கிராஃபிக்ஸ் வடிவமைப்புக் கருவியை உருவாக்கி ஒரு தொழிலதிபராக உயர்ந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? அனைவரையும் வாயடைக்க வைக்கும் அந்த இளைஞரின் வெற்றி பயணத்தை இந்தச் செய்தி தொகுப்பில் காணலாம்…!
ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்த பெரும் பணம் தேவைப்படும் என்பதே நம் அனைவரின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் ஒரு சிலரோ அந்த வெற்றியை பணத்தின் மூலமாக அல்ல… அவர்கள் காணும் மிகப்பெரிய கனவின் மூலம் அடைகின்றனர்.
தாதா சாஹேப் பாகத் என்ற இளைஞரின் நம்ப முடியாத வாழ்க்கை பயணம் இதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. யாரும் எதிர்பார்த்திராத இடத்தில் இருந்து தொடங்கிய அவரது வாழ்க்கை, RAGS TO RICHES என்ற வாக்கியத்தை அடிக்கோடிட்டு காட்டும் வகையில் இன்று மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர்தான் இந்தத் தாதாசாஹேப் பாகத். விவசாயத்தை நம்பியே அவர்களின் வாழ்க்கை இருந்ததாலோ என்னவோ தாதாசாஹேபின் கல்விக்கு குடும்பத்தார் பெரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. இருப்பினும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் சொந்த ஊரில் 10-ம் வகுப்பு வரை படித்த தாதாசாஹேப், பின்னர் ஒரு சாதாரண ITI படிப்பையும் முடித்தார்.
வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் புனேவிற்கு பயணமான தாதாசாஹேப், அங்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலைக்குச் சேர்ந்து பணியாற்றினார். ஆனால் அந்தச் சம்பளம் அவரது வாழ்க்கையை முன்னோக்கி கொண்டுசெல்ல போதுமானதாக இருக்கவில்லை. அப்போதுதான் அவருக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஆஃபீஸ் பாயாகப் பணியாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது. சம்பளம் 9 ஆயிரம் ரூபாய் என்பதால் அந்த வேலையை விட்டுவிட மனமின்றி உடனடியாகப் பணிக்குச் சேர்ந்தார்.
அலுவலகத்தில் தினமும் தரையை சுத்தம் செய்வது, ஊழியர்களுக்குத் தேவையானதை கொண்டு வந்து கொடுப்பது, பார்சல்களை எடுத்துச் செல்வது என ஓடியபடியே இருந்த தாதாசாஹேபிற்கு, கணினி முன் அமர்ந்து பணியாற்றிய ஊழியர்களைக் காணும்போதெல்லாம் மனதில் ஒருவித ஏக்கம் தொற்றிக்கொண்டது. அந்த ஏக்கம் நாளடைவில் அவருக்குள் பலவித கேள்விகளை எழுப்பியது.
ஒரு கட்டத்தில் நாம் ஏன் இதுபோன்ற பணிகளைச் செய்யக்கூடாது என எண்ணத்தொடங்கிய தாதாசாஹேப், அதுபற்றி அங்கிருந்த ஊழியர்கள் பலரிடம் வினவத் தொடங்கினார். ஆனால் அவர்களிடம் இருந்து வந்த பதில்கள் அனைத்தும், உனக்கு டிகிரி இல்லை, இந்த வேலையெல்லாம் கஷ்டம், இதையெல்லாம் உன்னால் செய்ய முடியாது என எதிர்மறையாகவே இருந்தன.
இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து வாய்ப்பை தேடி அலைந்த தாதாசாஹேபிற்கு, கிராஃபிக் டிசைன் கற்றுப்பாரு… அங்கு கைவண்ணம் தான் முக்கியம்… டிகிரி அல்ல என ஒருவர் வழங்கிய ஆலோசனை அவரின் மொத்த வாழ்க்கையையே மாற்றியமைத்தது.
அந்த ஆலோசனை தாதாசாஹேபின் உள்ளத்தில் கனலாக எரியத் தொடங்க, சிறு வயதில் கோவில் சுவற்றில் ஓவியம் வரைந்தவர் மூலம் ஓவியக்கலையை கற்றுக்கொண்டது அவரின் நினைவுக்கு வந்தது. அந்தத் திறனை வைத்து இரவில் ஆஃபீஸ் பாய் வேலை, பகலில் கிராஃபிக் டிசைன் பயிற்சியெனத் தனது வாழ்க்கையை தொடர்ந்த தாதாசாஹேப், ஒரே ஆண்டில் திறமையான கிராஃபிக் டிசைனராக உருவெடுத்தார்.
தன்னம்பிக்கையை மட்டுமே துணையாகக் கொண்டிருந்த தாதாசாஹேப் பெரிய நிறுவனங்களில் வேலை தேடுவதை தவிர்த்து, தான் சேமித்து வைத்திருந்த சிறு தொகையில் தனது சொந்த கிராஃபிக் டிசைன் நிறுவனத்தைத் தொடங்கினார்.
தொடக்கம் அவருக்குச் சிறப்பாக அமைந்தாலும் 2020-ல் வந்த கோவிட் லாக்டவுன் அவரது தொழிலுடன் வாழ்க்கையையும் முடக்கிப்போட்டது. புனே அலுவலகம் மூடப்பட்டபோது என்ன நடந்தாலும் துவண்டுவிடக் கூடாது என்ற எண்ணம் தாதாசாஹேபை மீண்டெழச் செய்தது.
சொந்த கிராமத்திற்கு திரும்பிய அவர் அங்குள்ள மலைமேடுகளில் ஒரு கொட்டகை அமைத்துத் தனது குழுவுடன் பணியை தொடர்ந்தார். வசதிகள் குறைவு என்றாலும் தாதாசாஹேபின் கனவு மிகப் பெரியதாக இருந்ததால், DESIGN TEMPLATE என்ற இந்தியாவின் சொந்த கிராஃபிக்ஸ் வடிவமைப்புக் கருவியை அவரால் உருவாக்க முடிந்தது.
பின் அவரது முயற்சியாலும், உறுதியாலும், கடின உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்த தாதாசாஹேப், இன்று வெற்றியின் உச்சாணிக்கொம்பை எட்டிப்பிடித்துள்ளார். அவரது நிறுவனம் மூலம் இந்தியாவுக்கே உரிய டிசைன் டெம்ளேட்டுகள் இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.
தாதாசாஹேப் பாகதின் முயற்சியைப் பாராட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவரை MAKE IN INDIA திட்டத்திற்கான சிறந்த உதாரணம் என மெச்சியுள்ளார். பல விஷயங்களை முயற்சி செய்து உங்களுக்குப் பிடித்ததை கண்டுபிடித்தால்… அதில் முழு மனதுடன் ஈடுபட்டால்… வெற்றி உங்கள் வசப்படும் என்பதே, வெற்றியை நோக்கி ஓடும் ஒவ்வொரு இளைஞருக்கும் தாதாசாஹேபின் வாழ்க்கை எடுத்துரைக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.