தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திண்டுக்கலில் கடந்த 4 தலைமுறைகளாகத் தயாரிக்கப்பட்டு வரும் தனித்துவமான ஜிலேபி மக்களிடையே பிரபலமாகி வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.
திண்டுக்கல் நாகல் நகர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சேஷா ஐயர் மிட்டாய் கடை, ஆண்டு முழுவதும் பல இனிப்பு மற்றும் காரவகை தின்பண்டங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அவர்கள் தயாரிக்கும் ஜிலேபி-க்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும், பிறந்தநாள் போன்ற இல்ல விழாக்களிலும் இவர்கள் தயாரிக்கும் ஜிலேபிக்களை மக்கள் ஆர்வமுடன் ஆர்டர் செய்து மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாகத் திண்டுக்கலுக்கு பெயர்போன பூட்டு, பிரியாணி, சிறுமலை வாழைப்பழம் ஆகியற்றின் வரிசையில் 4 தலைமுறைகளாகச் சுவை மாறாமல் தயாரித்து விற்பனை செய்யப்படும் சேஷா ஐயர் மிட்டாய் கடையின் ஜிலேபியும் இடம்பிடித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
உளுந்து, அரிசியை நன்கு ஊறவைத்து அரைத்து மாவாக்கி, துணியைப் பயன்படுத்தி அதனை எண்ணெயில் வட்ட வடிவில் பிழிந்தெடுக்கின்றனர். பொன்நிறத்தில் வெந்தபின் அவற்றைத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள சர்க்கரை பாகில் ஊறவைத்து, நன்கு வடிகட்டிய சர்க்கரை பாகை அதன் மேல் ஊற்றுவதன் மூலம் சுவைமிகுந்த ஜிலேபி தயாரிக்கப்படுகிறது.
எந்தவித ரசாயனமோ, வண்ண பொடிகளோ கலக்காமல் மிகவும் சுகாதாரமான முறையில் சுவைமிகுந்த ஜிலேபிக்கள் தயாரிக்கப்படுவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி வாங்கி உண்பதாகக் கூறுகின்றனர் இக்கடையின் பணியாளர்கள்.
தாத்தா தொடங்கிய தொழிலைக் கைவிட மனமில்லாமல் குடும்ப தொழிலை நான்காவது தலைமுறையாக முன்னெடுத்து செல்வதாகக் கூறுகிறார் சேஷா ஐயர் மிட்டாய் கடை உரிமையாளர் பிரியா லட்சுமி. தாத்தாவின் கைவண்ணம் மாறாமல் குடும்ப தொழிலை செய்வது மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தாலும், தங்கள் தொழில் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடிகிறது என்ற எண்ணம் அதிலும் அதிக மனநிறைவை அளிக்கிறது எனப் பெருமிதம் நிறைந்த முகத்துடன் கூறுகிறார் பிரியா லட்சுமி.